ஜன. 7,8-களில் அமெரிக்கா - சீனா வர்த்தகப் பேச்சுவார்த்தை

வர்த்தகப் போர் பதற்றத்தைத் தணிப்பதற்கான அடுத்தக்கட்ட அமெரிக்க - சீன பேச்சுவார்த்தை, சீனாவில் வரும் 7 மற்றும் 8-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
ஜன. 7,8-களில் அமெரிக்கா - சீனா வர்த்தகப் பேச்சுவார்த்தை


வர்த்தகப் போர் பதற்றத்தைத் தணிப்பதற்கான அடுத்தக்கட்ட அமெரிக்க - சீன பேச்சுவார்த்தை, சீனாவில் வரும் 7 மற்றும் 8-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து சீன வர்த்தகத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான அடுத்தக்கட்ட வர்த்தகப் பேச்சுவார்த்தை வரும் திங்கள்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெறவிருக்கிறது.
இதற்காக, அமெரிக்க வர்த்தக மேம்பாட்டுத் துறை துணைத் தலைவர் ஜெஃப்ரி கெர்ரிஷ் தலைமையிலான குழு பெய்ஜிங் வருகிறது.
கடந்த ஆண்டு ஆர்ஜென்டீனாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின்போது, அதிபர் ஷி ஜின்பிங்கும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் செய்து கொண்ட உடன்படிக்கைக்கு செயல்வடிவம் கொடுப்பதற்கான பேச்சுவார்த்தையை அமெரிக்க - சீன குழுவினர் மேற்கொள்வர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருள்களின் மதிப்பைவிட, அந்த நாட்டிடமிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருள்களின் மதிப்பு அதிகமாக இருப்பதால், இரு நாடுகளுக்கும் இடையே நியாயமற்ற அளவில் வர்த்தகப் பற்றாக்குறை நிலவி வருவதாக அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார்.
மேலும், அமெரிக்க நிறுவனங்கள் காப்புரிமை பெற்ற தொழில்நுட்பங்களைத் திருடி சீனா பயன்படுத்தி வருவதால் அமெரிக்க நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டி வருகிறார்.
இதன் காரணமாக, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் மீது கூடுதல் வரி விதிக்கும் உத்தரவைப் அவர் பிறப்பித்து வந்தார்.
இதற்குப் பதிலடியாக, அமெரிக்க இறக்குமதி பொருள்கள் மீது சீனாவும் கூடுதல் வரிகளை அறிவித்து வந்தது.
இது, உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்திகளான அந்த இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் வெடிக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியது.
இந்தச் சூழலில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் ஆர்ஜென்டீனா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் கடந்த ஆண்டின் இறுதியில் நடைபெற்ற ஜி20 நாடுகளின் மாநாட்டினிடையே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, சீனப் பொருள்கள் மீது அமெரிக்காவும், அமெரிக்கப் பொருள்கள் மீது சீனாவும் கூடுதல் வரி விதிப்பதை 90 நாள்களுக்கு நிறுத்திவைக்க இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்தன.
மேலும், இந்த மாதம் 1-ஆம் தேதி முதல் 20,000 கோடி டாலர் (சுமார் ரூ.14 லட்சம் கோடி) மதிப்பிலான சீனப் பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் முடிவையும் அமெரிக்கா கைவிட்டது.
அமெரிக்காவிடமிருந்து வேளாண்மை, தொழிற்துறை மற்றும் எரிசக்திப் பொருள்களை கணிசமான அளவில் இறக்குமதி செய்ய சீனா ஒப்புக் கொண்டது.
இந்த தாற்காலிக சமாதான ஒப்பந்தத்தை நிரந்தரமாக்கும் வகையில், இரு நாடுகளும் அமெரிக்காவில் கடந்த மாதம் பேச்சுவார்த்தை நடத்தின. 
இந்தச் சூழலில், அடுத்தக் கட்டப் பேச்சுவார்த்தையை மேற்கொள்வதற்காக தற்போது அமெரிக்கக் குழு சீனா வரவுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com