பிரேசில் அணை உடைப்பு: பலி எண்ணிக்கை 58-ஆக அதிகரிப்பு

பிரேசிலில் அணை உடைந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58-ஆக அதிகரித்துள்ளது. விபத்தில் சிக்கி மாயமான 300 பேரைத் தேடும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது.

பிரேசிலில் அணை உடைந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58-ஆக அதிகரித்துள்ளது. விபத்தில் சிக்கி மாயமான 300 பேரைத் தேடும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது.
பிரேசிலின் மினாஸ் கெரியாஸ், பெலோ ஹரிஸான்டே நகருக்கு அருகில் தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான இரும்புத் தாது சுரங்கம் உள்ளது. இந்தச் சுரங்கத்துக்கு அருகே பயன்படுத்தப்படாத அணை ஒன்று சேறும் சகதியுமாக இருந்தது. மேலும், அந்தச் சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளும் அந்த அணையில் வந்து சேர்ந்தது.
இந்நிலையில், அந்த அணையில் கடந்த வெள்ளிக்கிழமை உடைப்பு ஏற்பட்டதால், அதிலிருந்த கழிவுகள், அருகில்  உள்ள புரூமாடின்கோ நகரை நோக்கி வெள்ளமாகப் பாய்ந்தது. அருகில் உள்ள சுரங்க வளாகத்துக்குள்ளும், குடியிருப்புக்குள்ளும் வெள்ளம் புகுந்தது.
அப்போது வீடுகளில் இருந்தவர்களும், சுரங்க வளாகத்தில் இருந்தவர்களும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து,  தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இதனிடையே, வெள்ளம் அதிகரிப்பதாக வெளியான தகவலை அடுத்து, மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டன. இரு நாள்களுக்குப் பிறகு, மீண்டும் மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.  
இதில், ஹெலிகாப்டர்கள், மோப்ப நாய்கள் ஆகியவற்றின் உதவியுடன் 1,000 ராணுவ வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 192 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் காயமடைந்த 23 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், இந்த விபத்து காரணமாக, சேற்றில் புதையுண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58-ஆக அதிகரித்துள்ளது. மாயமான 300 பேரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் ஃபிளேவியோ கோடின்கோ கூறினார். இது, பிரேசில் வரலாற்றில் மிக மோசமான பேரிடராகும்.
இந்த விபத்து குறித்து, பிரேசில் அதிபராக இந்த மாதத் தொடக்கத்தில் பொறுப்பேற்ற ஜெயிர் பொல்சொனாரோ தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "அணை உடைந்த விபத்தைக் காணும்போது, மனம் கலங்காமல் எளிதில் கடந்துவிட முடியாது; மீட்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்படும். இதுபோன்று மீண்டுமொரு விபத்து ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com