வட கொரியாவில் டிரம்ப்: புதிய எதிர்காலம் உருவாகும் என்று கிம் ஜோங்-உன் நம்பிக்கை

வட கொரியாவில் காலடி வைத்தன் மூலம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் வரலாறு படைத்துள்ளார்.
வட கொரியாவில் டிரம்ப்: புதிய எதிர்காலம் உருவாகும் என்று கிம் ஜோங்-உன் நம்பிக்கை

வட கொரியாவில் காலடி வைத்தன் மூலம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் வரலாறு படைத்துள்ளார்.
 ஏற்கெனவே வட கொரிய அதிபர் ஒருவரை நேரடியாகச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையைப் பெற்றுள்ள டிரம்ப், வட கொரியாவுக்குச் சென்ற முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையையும் ஞாயிற்றுக்கிழமை பெற்றார்.
 இந்த வருகையின் மூலம் புதிய எதிர்காலத்தை டிரம்ப் உருவாக்குவார் என்று வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் நம்பிக்கை தெரிவித்தார்.
 ஜப்பானின் ஒசாகா நகரில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெற்ற ஜி20 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்ற அதிபர் டிரம்ப், அங்கிருந்து தென் கொரியாவுக்குப் புறப்பட்டார்.
 அதற்கு முன்னதாக, தென் கொரியாவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே ராணுவம் விலக்கப்பட்ட எல்லை கிராமமான பான்முன்ஜோமில் தம்மை சந்திக்க வருமாறு வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னுக்கு சுட்டுரை (டுவிட்டர்) வலைதளம் மூலம் டிரம்ப் அழைப்பு விடுத்தார்.
 யாரும் எதிர்பாராத வகையில் விடுக்கப்பட்ட அந்த அழைப்பை ஏற்று, எல்லைப் பகுதியில் டிரம்பை சந்திக்க கிம் ஜோங்-உன் ஒப்புக்கொண்டார்.
 அதையடுத்து பான்முன்ஜோம் எல்லை கிராமத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அதிபர் டிரம்ப்பை, எல்லைக்கு அப்பால் வட கொரிய பகுதியிலிருந்து கிம் ஜோங்-உன் வரவேற்றார். பிறகு எல்லைக் கோட்டைத் தாண்டி வட கொரிய பகுதிக்கு டிரம்ப் சென்றார்.
 வட கொரிய பகுதிக்கு அமெரிக்க அதிபர் ஒருவர் செல்வது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
 தங்களது பகுதிக்கு வந்த டிரம்ப்பை கிம் ஜோங்-உன் கைகுலுக்கி வரவேற்றார்.
 பிறகு செய்தியாளர்களிடம் டிரம்ப் கூறியதாவது: எல்லைக் கோட்டைத் தாண்டி வட கொரியாவுக்கு வந்ததில் பெருமையடைகிறேன். இந்த நாள் உலக அமைதிக்கு மிகச் சிறந்த நாளாகும்.
 அதிபர் கிம் ஜோங்-உன்னுடன் பேசும்போது, அவரை அமெரிக்கா வருமாறு அழைப்பு விடுப்பேன்.
 எங்களுக்கிடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையை வேகமாக முடிக்க வேண்டும் என்பதைவிட சரியான முறையில் முடிக்க வேண்டும் என்பதற்கே முன்னுரிமை கொடுத்து வருகிறோம். வட கொரியாவுடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகளின்போது, அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளைத் தளர்த்த ஒப்புக் கொள்வதற்கான வாய்ப்பும் உள்ளது என்றார் டிரம்ப்.
 அதிபர் கிம் ஜோங்-உன் கூறுகையில், "தம்மை நேரில் சந்திக்க வருமாறு சுட்டுரை மூலம் டிரம்ப் விடுத்த அழைப்பைக் கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்தேன்.
 மோசமான இறந்த காலங்களை மறந்து, புதிய எதிர்காலத்தை உருவாக்க டிரம்ப் உறுதி செய்திருப்பதை, இந்த வருகை மூலம் அவர் நிரூபித்துள்ளார்.
 கூடிய விரைவில் வட கொரிய தலைநகர் பியாங்கியோங்குக்கு வர வேண்டும் என்று அவருக்கு நான் அழைப்பு விடுப்பேன்' என்றார்.
 அதனைத் தொடர்ந்து தென் கொரியப் பகுதிக்கு கிம் ஜோங்-உன்னை அழைத்து வந்த டிரம்ப், அங்குள்ள "சுதந்திர இல்ல'த்தில் அவருடன் சுமார் 50 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்.
 பேச்சுவார்த்தையைத் தொடர சம்மதம்: தற்போது தடைபட்டுள்ள அணுசக்தி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
 ஐ.நா. தடையையும் மீறி அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் சோதித்து வந்த வட கொரியா, அந்த ஆயுதங்களைக் கைவிடத் தயாராக இருப்பதாக கடந்த ஆண்டு தொடக்கத்தில் அறிவித்தது.
 அதனைத் தொடர்ந்து, டிரம்ப், கிம் ஜோங்-உன் ஆகியோர் சிங்கப்பூரிலும், வியத்நாம் தலைநகர் ஹனோயிலும் இரு முறை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
 எனினும், வட கொரியா மீதான பொருளாதாரத் தடைகளை உடனடியாகத் தளர்த்த டிரம்ப் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துவிட்டதால் அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
 இந்த நிலையில், கொரிய எல்லைப் பகுதியில் இரு தலைவர்களும் 3-ஆவது முறையாக தற்போது சந்தித்துப் பேசியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com