ஹாங்காங் சட்டப்பேரவையை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்

ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய நாடு கடத்தல் சட்ட மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் திங்கள்கிழமை ஹாங்காங் சட்டப்பேரவைக்குள் நுழைந்து முற்றுகையிட்டனர். 
பேரவை கட்டடத்துக்குள் முற்றுகையிட்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்.
பேரவை கட்டடத்துக்குள் முற்றுகையிட்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்.


ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய நாடு கடத்தல் சட்ட மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் திங்கள்கிழமை ஹாங்காங் சட்டப்பேரவைக்குள் நுழைந்து முற்றுகையிட்டனர். 
பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த ஹாங்காங், சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டதன் 22-ஆவது ஆண்டு தினத்தையொட்டி திங்கள்கிழமை நடத்தப்பட்ட கொடியேற்ற நிகழ்ச்சியின்போது போராட்டக்காரர்கள் போலீஸாரை தாக்கினர். அப்போது அத்துமீறி ஹாங்காங் சட்டப்பேரவையை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், அதன் கண்ணாடிச் சுவர்களை உடைத்தனர். பலத்த காவலையும் மீறி பேரவைக்குள் நுழைந்து உள்சுவரில் சீன மத்திய அரசுக்கு எதிரான வாசகங்களை எழுதினர்.  
சர்ச்சைக்குரிய நாடு கடத்தல் சட்ட மசோதாவை எதிர்த்து ஹாங்காங்கில் ஏற்கெனவே தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஹாங்காங்கை சீனாவிடம் ஒப்படைத்து 22 ஆண்டுகள் நிறைவடைவதை குறிக்கும் வகையில் கொடியேற்ற நிகழ்ச்சிக்கு திங்கள்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாமுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மேலும், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். இந்த நிலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த துறைமுக வளாகத்தை ஹெல்மெட் அணிந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து, போலீஸார் கலவர தடுப்பு கவசம் மற்றும் மிளகு தெளிப்பான்களை (பெப்பர் ஸ்ப்ரே) பயன்படுத்தி போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். 
சட்டப்பேரவை முற்றுகை: அதன் பிறகு, ஹாங்காங் சட்டப்பேரவையை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணியாக சென்றனர். அவர்களைக் கலைந்து செல்லுமாறு போலீஸார் எச்சரித்தனர். ஆனால், ஆர்ப்பாட்டக்காரர்கள் சட்டப்பேரவை வளாகத்தில் இருந்த கண்ணாடிச் சுவர்களை நொறுக்கி அந்தக் கட்டடத்துக்குள் நுழைந்தனர். 
நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரவை வளாகத்தில் நுழைந்ததை அடுத்து, அந்த இடம் போர்க்களமாக காட்சியளித்தது. போராட்டக்காரர்களை அவையிலிருந்து வெளியேற்ற போலீஸார் கண்ணீர்ப்புகை குண்டு வீசினர். பின்னர் தடியடி நடத்தினர். 
இதனிடையே கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம் கூறியதாவது:
தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் போராட்டங்கள் மற்றும் பேரணிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். இந்த நிகழ்வு எனக்கு ஓர் உண்மையை வெளிக்காட்டியுள்ளது. அது அரசியல்வாதியாக உள்ள நான் எந்நேரமும் பொதுமக்களின் உணர்வுகளை துல்லியமாக புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளது. 
எனவே, ஹாங்காங் அரசின் எதிர்கால செயல்பாடுகள் மக்களின் விருப்பம் மற்றும் உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவே இருக்கும் என்றார். 
 ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவர்களை சீன பெருநிலப் பகுதிக்கு நாடு கடத்த வகை செய்யும் சட்ட மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி பொதுமக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, இந்த விவகாரத்தில் அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தியதற்கு ஹாங்காங் அரசின் தலைமை நிர்வாகி கேரி லாம் மன்னிப்பு கேட்டதுடன்,   சர்ச்சைக்குரிய அந்த சட்ட மசோதாவை சட்டப் பேரவையில் முன்னெடுத்துச் செல்லப்போவதில்லை என்றும் உறுதியளித்தார்.  
எனினும், இந்த விவகாரத்தில் கேரி லாம் மன்னிப்பு கேட்டால் மட்டும் போதாது, அவர் உடனடியாக பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் எனவும்,  கைது செய்யப்பட்டுள்ள போராட்டக் குழுவினரை உடனடியாக விடுவிக்கவும் கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

கண்ணாடி தடுப்புகளை உடைத்து சட்டப்பேரவைக்குள் நுழையும் ஆர்ப்பாட்டக்காரர்களை தடுக்க முயன்ற காவல்துறையினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com