அமெரிக்கா-சீனா இடையே வர்த்தகப் பேச்சுவார்த்தை தொடங்கியது

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான வர்த்தகப் போர்ப்பதற்றம் முடிவுக்கு வர வேண்டும் என்று உலக நாடுகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்
அமெரிக்கா-சீனா இடையே வர்த்தகப் பேச்சுவார்த்தை தொடங்கியது


அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான வர்த்தகப் போர்ப்பதற்றம் முடிவுக்கு வர வேண்டும் என்று உலக நாடுகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தருணத்தில், இவ்விரு நாடுகளும் வர்த்தகப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கியுள்ளன.
இதற்காக, அமெரிக்காவின் கருவூலத் துறைச் செயலர் ஸ்டீவன் நூசின், வரத்தகப் பிரதிநிதி ராபர்ட் லைதிஸர் ஆகிய இருவரும் சீனாவின் துணைப் பிரதமர் லியூ ஹீ, வர்த்தகத் துறை அமைச்சர் ஜோங் ஷான் ஆகியோருடன் தொலைபேசி மூலம் செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தப் பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமானதாக அமைந்ததாக, வெள்ளை மாளிகையின் பொருளாதார ஆலோசகர் லாரி குட்லோவ், செய்தியாளர்களிடம் கூறினார். பேச்சுவார்த்தையின்போது விவாதிக்கப்பட்ட விஷயங்களை தற்போதைக்கு விரிவாகக் கூற முடியாது என்றும் அவர் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, ஃபாக்ஸ் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், "சீனாவுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. விரிவான பேச்சுவார்த்தைக்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும்' என்றார். அவர் மேலும் கூறியதாவது:
சீனாவுக்கு விற்பனை செய்யப்படும் பொருள்களுக்கு புதிய வரிகள் விதிப்பதை நிறுத்திக் கொள்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து, அமெரிக்க பொருள்களை சீனா விரைவில் வாங்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார் அவர்.
சீனாவும், அமெரிக்காவும் பரஸ்பரம் இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு கூடுதல் வரியை விதித்ததால், இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகப் போர்ப்பதற்றம் நீடித்தது. இந்நிலையில், ஜப்பானில் கடந்த மாதம் 29-ஆம் தேதி நடைபெற்ற ஜி20 நாடுகள் மாநாட்டினிடையே,  அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தடைபட்டுள்ள வர்த்தகப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
மேலும், பரஸ்பர இறக்குமதிப் பொருள்கள் மீது இனி கூடுதல் வரி விதிக்கப்பட மாட்டாது என்றும் இருவரும் உறுதியளித்தனர். அதன் தொடர்ச்சியாக, இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com