குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில் சட்டப்படி அடுத்த நடவடிக்கை

குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில் சட்டப்படி அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில் சட்டப்படி அடுத்த நடவடிக்கை

குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில் சட்டப்படி அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறுஆய்வு செய்ய வேண்டுமென சர்வதேச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. சர்வதேச ஒப்பந்தங்களின்படி, குல்பூஷண் ஜாதவுக்கு அளிக்கப்பட வேண்டிய சட்டரீதியிலான உரிமைகள் அளிக்கப்பட வேண்டுமென உத்தரவிட்ட சர்வதேச நீதிமன்றம், நேர்மையான முறையில் விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் வரை குல்பூஷண் ஜாதவின் மரண தண்டனையை நிறைவேற்றக் கூடாது எனவும் தெரிவித்தது.
அதே வேளையில், ஜாதவின் மரண தண்டனையை ரத்து செய்து, உடனடியாக அவரை விடுதலை செய்யக் கோரிய இந்தியாவின் கோரிக்கையை சர்வதேச நீதிமன்றம் நிராகரித்தது. 
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வியாழக்கிழமை வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், "குல்பூஷண் ஜாதவை விடுவித்து, இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பக் கூடாது என்ற  தீர்ப்பை வரவேற்கிறேன். பாகிஸ்தான் மக்களுக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளில் ஜாதவ் ஈடுபட்டுள்ளார். இதில், சட்டப்படி அடுத்தகட்ட நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு மேற்கொள்ளும்' என்று குறிப்பிட்டிருந்தார்.
பாகிஸ்தானுக்கு வெற்றி:  பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி தனது சுட்டுரையில் பதிவிட்டதாவது: குல்பூஷண் ஜாதவ் தொடர்ந்து பாகிஸ்தானில் இருப்பார். நாட்டின் சட்டவிதிகளின்படி அவர் நடத்தப்படுவார். இந்தத் தீர்ப்பானது, பாகிஸ்தானுக்குக் கிடைத்த வெற்றியாகும். அவரை விடுதலை செய்ய வேண்டுமென்ற இந்தியாவின் கோரிக்கையை சர்வதேச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. அவரை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டுமெனவும் இந்தியா கோரியது. அவர்களின் கோரிக்கை  நிராகரிக்கப்பட்டது. இருந்தபோதிலும், இந்த விவகாரத்தில் தங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளதாக இந்தியா கூறிவருகிறது என்று குறிப்பிட்டுள்ளார் முகமது குரேஷி.
கனவு பலிக்கவில்லை: பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ஆசிஃப் கஃபூர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி இந்திய எல்லைக்குள் புகுந்து, அந்நாட்டின் போர் விமானத்தைச் சுட்டுவீழ்த்தினோம். அது இந்தியாவுக்குப் பெரும் ஆச்சரியமாக இருந்தது.
அதேபோன்ற ஆச்சரியத்தை சர்வதேச நீதிமன்றம் இந்தியாவுக்குத் தற்போது அளித்துள்ளது. தனது அரசியல் பலத்தின் மூலமாக நீதியைக் கட்டுப்படுத்திவிட முடியும் என இந்தியா கனவுகண்டது. ஆனால், அது நடக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com