ஈரானின் ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா

ஈரானுக்குச் சொந்தமான ஆளில்லா விமானத்தை ("டிரோன்') வெள்ளிக்கிழமை சுட்டுவீழ்த்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, பாரசீக வளைகுடாப் பகுதியில் நிலவி வந்த பதற்றம் அதிகரித்துள்ளது.
ஈரானின் ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா

ஈரானுக்குச் சொந்தமான ஆளில்லா விமானத்தை ("டிரோன்') வெள்ளிக்கிழமை சுட்டுவீழ்த்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, பாரசீக வளைகுடாப் பகுதியில் நிலவி வந்த பதற்றம் அதிகரித்துள்ளது.
ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் விதித்த பிறகு, அந்நாட்டின் மீது அமெரிக்கா நடத்திய முதல் நேரடித் தாக்குதலாக இது கருதப்படுகிறது.
ஈரானுடன் கடந்த 2015-ஆம் ஆண்டு மேற்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அமெரிக்கா கடந்த ஆண்டு அறிவித்தது. இதையடுத்து ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தது. பதிலுக்கு, அணுசக்தி ஒப்பந்தத்தின் விதிமுறைகளைக் கடைப்பிடிக்கப் போவதில்லை என ஈரானும் மிரட்டல் விடுத்துவருகிறது. இதன் காரணமாக, ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவியது. 
இந்நிலையில், ஹோர்முஸ் நீர்ச்சந்தி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த "யுஎஸ்எஸ் பாக்ஸர்' போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்த முயன்றதால், ஈரானுக்குச் சொந்தமான ஆளில்லா விமானத்தைச் சுட்டுவீழ்த்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, அமெரிக்கப் பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் ஜோனாதன் ஹோஃப்மன் கூறுகையில், ""அமெரிக்காவுக்குச் சொந்தமான யுஎஸ்எஸ் பாக்ஸர் போர்க்கப்பலுக்கு ஈரானின் ஆளில்லா விமானம் தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வந்தது. கப்பலின் பாதுகாப்புக்காகவும், கப்பலிலிருந்த குழுவைத் காக்கும் நோக்கிலும், அந்த ஆளில்லா விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது. இது முற்றிலும் தற்காப்புக்காக மட்டுமே எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்'' என்றார்.
முழு உரிமை: இது குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாரசீக வளைகுடாப் பகுதியில் பயணிக்கும் கப்பல்களுக்கு ஈரான் தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வருகிறது. மர்மமான முறையில் கப்பல்களைத் தாக்கும் பாணியை அந்நாடு கடைப்பிடித்து வருகிறது.
 "யுஎஸ்எஸ் பாக்ஸர்' போர்க்கப்பல் மீதும் தாக்குதல் நடத்த அந்நாட்டின் ஆளில்லா விமானம் முயன்றது. ஆனால், போர்க்கப்பலுக்கு சுமார் 900 மீட்டர் தொலைவில் நெருங்கி வந்தபோது, அந்த ஆளில்லா விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது.
எங்கள் நாட்டுக் கப்பலையும், ராணுவ வீரர்களையும் காப்பதற்கு எங்களுக்கு முழு உரிமை உள்ளது. உலக வர்த்தகத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், வளைகுடாப் பகுதியில் கப்பல்களின் போக்குவரத்தைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளையும் ஈரான் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் நடவடிக்கைகளுக்கு எதிராக சர்வதேச நாடுகள் ஓரணியில் திரள வேண்டும் என்றார் அதிபர் டிரம்ப்.
தாக்கப்படவில்லை: இருந்தபோதிலும், தங்கள் நாட்டின் ஆளில்லா விமானங்கள் எதுவும் சுட்டுவீழ்த்தப்படவில்லை என ஈரான் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, அந்நாட்டின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் அப்பாஸ் அரகச்சி வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், "ஹோர்முஸ் நீர்ச்சந்தி பகுதியிலோ அல்லது உலகின் வேறு எந்தப் பகுதியிலோ எங்களுடைய ஆளில்லா விமானங்கள் எதுவும் பாதிப்புக்குள்ளாகவில்லை. யுஎஸ்எஸ் பாக்ஸர் போர்க்கப்பல், அவர்களுக்குச் சொந்தமான ஆளில்லா விமானத்தையே தவறுதலாகச் சுட்டுவீழ்த்தியுள்ளது என்று கருதுகிறேன்' என்று குறிப்பிட்டிருந்தார்.
அடிப்படை ஆதாரமற்றது: ஈரான் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ""ஈரான் நாட்டுக்குச் சொந்தமான ஆளில்லா விமானத்தைச் சுட்டுவீழ்த்தியதாக அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளது முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றது. எங்களது ஆளில்லா விமானங்கள் அனைத்தும் விமானப்படைத் தளங்களுக்கு பத்திரமாகத் திரும்பி வந்துவிட்டன'' என்றார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com