டிரம்புடன் சந்திப்பு: ஏற்பாடு செய்த வட கொரிய அதிகாரிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்?

வியத்நாம் தலைநகர் ஹனோயில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும், வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால்,
கிம் ஜோங் உன், டொனால்ட் டிரம்ப் (கோப்புப் படம்).
கிம் ஜோங் உன், டொனால்ட் டிரம்ப் (கோப்புப் படம்).

வியத்நாம் தலைநகர் ஹனோயில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும், வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், அந்தச் சந்திப்பு ஏற்பாடுகளை கவனித்துக் கொண்ட வட கொரிய வெளியுறவுத் துறை அதிகாரிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தென் கொரிய ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்தத் தகவலின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பேயோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தென் கொரியாவிலிருந்து வெளியாகும் நாளிதழொன்று வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் ஆகியோரிடையிலான இரண்டாவது சந்திப்பு வியத்நாம் தலைநகர் ஹனோயில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது.

அந்தப் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை வட கொரிய வெளியுறவுத் துறை அதிகாரியான கிம் ஹியோக் சால் கவனித்துக் கொண்டார்.

டிரம்பைச் சந்திப்பதற்காக கிம் ஜோங்-உன் பிரத்யேக ரயிலில் சென்றபோது, ஹியோக் சாலும் அவருடன் சென்றார்.

இந்த நிலையில், பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், ஹியோக் சாலும், மற்றொரு வெளியுறவுத் துறை அதிகாரியும் சரியாக செயல்படவில்லை என்று கூறப்பட்டது.

அதையடுத்து, அதிபருக்கு துரோகம் இழைத்த குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டு, அந்த தண்டனை இந்த மாதம் நிறைவேற்றப்பட்டது.

மிரிம் விமான நிலையத்தில் அவர்கள் இருவருக்கும் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என்று அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது. எனினும், மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இரண்டாவது அதிகாரியின் பெயரை அந்த நாளிதழ் வெளியிடவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com