அகதிகள் விவகாரம்: மெக்ஸிகோ மீது டிரம்ப் கூடுதல் வரி விதிப்பு

மெக்ஸிகோ வழியாக தங்கள் நாட்டுக்குள் அகதிகள் வருவதைக் கட்டுப்படுத்த தவறியதற்காக, அந்த நாட்டிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு கூடுதல் வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார
மெக்ஸிகோவிலிருந்து ஏற்றுமதிப் பொருள்களை ஏற்றிக் கொண்டு அமெரிக்க எல்லையைக் கடக்கும் லாரி (கோப்புப் படம்).
மெக்ஸிகோவிலிருந்து ஏற்றுமதிப் பொருள்களை ஏற்றிக் கொண்டு அமெரிக்க எல்லையைக் கடக்கும் லாரி (கோப்புப் படம்).


மெக்ஸிகோ வழியாக தங்கள் நாட்டுக்குள் அகதிகள் வருவதைக் கட்டுப்படுத்த தவறியதற்காக, அந்த நாட்டிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு கூடுதல் வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவுகளில் தெரிவித்துள்ளதாவது:
சட்டவிரோத குடியேற்றவாசிகள் தங்கள் நாடு வழியாக அமெரிக்காவுக்குள் நுழைவதை மெக்ஸிகோ கட்டுப்படுத்தும் வரை, அந்த நாட்டுப் பொருள்களுக்கு 5 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும்.
அடுத்த மாதம் 10-ஆம் தேதியிலிருந்து இந்த முடிவு அமலுக்கு வரும்.
அதற்குப் பிறகும் சட்டவிரோத குடியேற்ற பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை என்றால், மெக்ஸிகோவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களின் மீதான கூடுதல் வரி படிப்படியாக அதிகரிக்கப்படும்.
மெக்ஸிகோ வழியாக சட்டவிரோத அகதிகள் வருவது நிறுத்தப்பட்டால், அந்த நாட்டுப் பொருள்கள் மீதான கூடுதல் வரிகள் ரத்து செய்யப்படும் என்று தனது சுட்டுரைப் பதிவுகளில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
எல் சால்வடார், ஹோண்டுரஸ், கெளதமாலா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகள் அமெரிக்கா வருவதற்கு அதன் அண்டை நாடான மெக்ஸிகோவைப் பயன்படுத்தி வருகின்றனர்.
அத்தகைய அகதிகள் அமெரிக்கா வருவது அதிகரித்து வரும் நிலையில், அவர்களைத் தடுத்து நிறுத்தத் தவறியதாக மெக்ஸிகோ மீது அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார்.
இந்தச் சூழலில், மெக்ஸிகோ பொருள்களுக்கு கூடுதல் வரி விதிப்பதாக அவர் இப்போது அறிவித்துள்ளார்.
அமெரிக்க கண்டத்தைச் சேர்ந்த நாடுகளிடையே வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக அண்மையில் வட அமெரிக்க நாடுகளுக்கான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (யுஎஸ்எம்சிஏ) மேற்கொள்ளப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் இரும்பு, அலுமினியம் ஆகிய பொருள்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கூடுதல் வரியை டிரம்ப் ரத்து செய்திருந்தார்.
எனினும், அகதிகள் விவகாரத்தில் மெக்ஸிகோ பொருள்கள் மீது தற்போது அவர் கூடுதல் வரி விதித்துள்ளது யுஎஸ்எம்சிஏ ஒப்பந்தத்தை பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com