தேர்தல் நன்கொடை பத்திரம்: தகவல் தர எஸ்பிஐ மறுப்பு

தேர்தல் நன்கொடை பத்திரம்: தகவல் தர எஸ்பிஐ மறுப்பு

தேர்தல் நன்கொடை பத்திரம் தொடர்பாக, மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களை பாரத ஸ்டேட் வங்கி(எஸ்பிஐ) கொடுக்க மறுத்து விட்டது.

தேர்தல் நன்கொடை பத்திரம் தொடர்பாக, மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களை பாரத ஸ்டேட் வங்கி(எஸ்பிஐ) கொடுக்க மறுத்து விட்டது.
அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதற்காக, தேர்தல் நன்கொடை பத்திரத் திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தியது. அதன்படி, அரசியல் கட்சிக்கு நன்கொடை அளிக்க விரும்புவோர், பாரத ஸ்டேட் வங்கியின் குறிப்பிட்ட கிளைகளில் இருந்து நன்கொடை பத்திரத்தை வாங்கி, தாங்கள் விரும்பும் கட்சிக்கு நன்கொடையாக அதனை அளிக்கலாம். அந்த பத்திரத்தில், நன்கொடையாளரின் பெயர், முகவரி உள்ளிட்ட எந்த விவரமும் இடம்பெறாது. இந்தியாவைச் சேர்ந்த தனி நபர் மற்றும் நிறுவனங்கள் இந்த நன்கொடையை அளிக்கலாம்.
இந்நிலையில், பாரத ஸ்டேட் வங்கியிடம் புணேவைச் சேர்ந்த விகார் துர்வே என்ற சமூக ஆர்வலர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில், ரிசர்வ் வங்கியிடம் இருந்தும், அரசுத் துறைகளிடம் இருந்தும் பெறப்பட்ட தகவல்களை அளிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கைக்கு பாரத ஸ்டேட் வங்கி பதிலளிக்க மறுத்து விட்டது. இதுகுறித்து பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை பொது தகவல் அதிகாரி கூறியதாவது:
மனுதாரரின் கோரிக்கை, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளிக்க முடியாத விவரங்களாகும். அதாவது, அந்த சட்டத்தின் 8(1)(உ) பிரிவின் படி, ஒரு அமைப்பு அல்லது நிறுவனத்தின் பொறுப்பாளராக இருக்கும் ஒருவர், தனக்கு கிடைத்த தகவல்களை சம்பந்தப்பட்ட அதிகாரம் வாய்ந்த அமைப்பின் அனுமதியின்றி வெளியிடக் கூடாது. இதேபோல், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் 8(1)(ஒ) பிரிவின்படி, பொதுமக்கள் நலனுக்கும், பொது செயல்பாட்டும் எந்த விதத்திலும் தொடர்பில்லாத தனி நபரின் தகவல்களை வெளியிடக் கூடாது.
மேலும், மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பாரத ஸ்டேட் வங்கி மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்த விவரங்களையும் வெளியிட முடியாது என்றார் அவர்.
தேர்தல் நன்கொடை பத்திரங்களை, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளே நன்கொடையாகப் பெற முடியும். இதேபோல், கடைசியாக நடந்து முடிந்த சட்டப் பேரவை அல்லது மக்களவைத் தேர்தலில் ஒரு சதவீதத்துக்கும் குறையாமல் அந்த கட்சிகள் வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும்.
அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதில் வெளிப்படைத்தன்மையை உருவாக்க வேண்டும் என்பதற்காக, இத்திட்டம் கொண்டுவரப்பட்டாலும், அதன் நோக்கம் நிறைவேறவில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, தேர்தல் நன்கொடை பத்திர விற்பனைக்கு தடை கோரி ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் என்ற அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், தேர்தல் நன்கொடை பத்திரத் திட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com