போகோ ஹராம் தற்கொலை தாக்குதல்: நைஜீரியாவில் 30 பேர் பலி

நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் 3 பேர் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர். 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 


நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் 3 பேர் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர். 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 
இதுதொடர்பாக அந்நாட்டு அவசரநிலை மேலாண்மைக் குழு அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை கூறியதாவது:
நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள போர்னோ மாநிலத்தில் கோண்டுகா பகுதியின் வணிக வளாகத்தில் உள்ள தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவு கால்பந்து போட்டியை ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியான 3 பேர் வளாகத்தின் உள்ளே நுழைய முயன்றதால், அவர்களை வளாகத்தின் கண்காணிப்பாளர் தடுத்து நிறுத்தியுள்ளார். அதையடுத்து இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 
வாக்குவாதத்தின் இடையே, அந்த 3 பேரில் இருவர் வளாகத்தில் இருந்த மக்களோடு கலந்து விட்டனர். இந்நிலையில், கண்காணிப்பாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். அதைத்தொடர்ந்து மக்களோடு கலந்திருந்த 2 பேரும் தங்களது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தனர். 
இந்த தற்கொலைத் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 9 பேர் உயிரிழந்தனர். தொலைதூர பகுதி என்பதால், மருத்துவர்கள் குழுவும், பாதுகாப்புப் படையினரும் சம்பவ இடத்தை அடைவதில் தாமதம் ஏற்பட்டது. அதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்தது. இதுவரை 30 பேர் உயிரிழந்தனர். 35-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
இந்த தாக்குதலை நடத்திய அந்த மூவரிடமும், போகோ ஹராம் பயங்கரவாதிகளின் அடையாளம் இருந்தது. அதனால் போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலை நிகழ்த்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என்று அந்த அதிகாரி கூறினார்.
நைஜீரியாவில் கடந்த 10 ஆண்டுகளாக பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வரும் போகோ ஹராம் பயங்கரவாதிகளால், இதுவரை 27,000 பேர் உயிரிழந்தனர். 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளை இழந்துள்ளனர். அதுமட்டுமன்றி, அண்டை நாடுகளான சாட், நைஜர், கேமரூன் ஆகிய நாடுகளிலும் போகோ ஹராம் பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அதனால், சாட், கேமரூன், நைஜர், நைஜீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ராணுவத்தினர்  இணைந்து போகோ ஹராம் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com