துருக்கி: இஸ்தான்புல் மேயர் தேர்தலில் எர்டோகன் கட்சி தோல்வி

துருக்கியின் இஸ்தான்புல் நகர மேயர் பதவிக்கு நடைபெற்ற மறுதேர்தலில், அந்நாட்டு அதிபர் தயீப் எர்டோகனின் கட்சி தோல்வியடைந்தது.


துருக்கியின் இஸ்தான்புல் நகர மேயர் பதவிக்கு நடைபெற்ற மறுதேர்தலில், அந்நாட்டு அதிபர் தயீப் எர்டோகனின் கட்சி தோல்வியடைந்தது.
இஸ்தான்புல் நகர மேயர் பதவிக்கான தேர்தல் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. அதில், எதிர்க்கட்சி வேட்பாளர் ஏக்ரெம் இமாமோக்லு, அதிபர் எர்டோகனின் ஆளுங்கட்சி சார்பில் போட்டியிட்ட பினாலி இல்டிரிமை மிகக் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ஆனால், இத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் மோசடியில் ஈடுபட்டு வெற்றி பெற்றதாக ஆளுங்கட்சி சார்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.
இதையடுத்து, மேயர் பதவிக்கு மறுதேர்தல் நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி, மறுதேர்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. தேர்தல் முடிவடைந்த பிறகு, வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கின. அதில், இமாமோக்லு 54 சதவீத வாக்குகளைப் பெற்றதாகவும், இல்டிரிம் 45 சதவீத வாக்குகளைப் பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது. 
நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் சூழலில், அதிபர் எர்டோகனின் ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலை காணப்படுவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர். தேர்தல் வெற்றி குறித்து இமாமோக்லு கூறுகையில், இது தனியொரு கட்சியின் வெற்றியல்ல; ஒட்டுமொத்த இஸ்தான்புலும், துருக்கியும் இத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளன. நாட்டின் வளர்ச்சிக்காக அதிபருடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளேன் என்றார்.
தேர்தலில் வெற்றி பெற்ற இமாமோக்லுவுக்கு அதிபர் எர்டோகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com