அமைதிக்கான பாதையை அமெரிக்கா அடைத்துவிட்டது: ஈரான் அதிபர் சீற்றம்

தங்கள் மீது கூடுதலாக பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதன் மூலம் பிரச்னைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பதற்கான பாதையை
டெஹ்ரானில் அமைச்சர்களுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்திய அதிபர் ஹஸன் ரெளஹானி.
டெஹ்ரானில் அமைச்சர்களுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்திய அதிபர் ஹஸன் ரெளஹானி.


தங்கள் மீது கூடுதலாக பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதன் மூலம் பிரச்னைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பதற்கான பாதையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடைத்து விட்டதாக ஈரான் அதிபர் ஹஸன் ரெளஹானி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து தொலைக்காட்சியில் அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
ஈரானுடனான பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்புவதாக அமெரிக்கா கூறுகிறது. மேலும், பேச்சுவார்த்தையில் பங்கேற்க அந்த நாடு விடுத்த அழைப்பை நாங்கள் அலட்சியம் செய்வதாகவும் குற்றம் சாட்டுகிறது.
அதே நேரம், பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டிய வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜாவத் ஷரீஃப் அமெரிக்கா வருவதற்கும், அவரது சொத்துகளை முடக்கவும் அந்த நாடு தடை விதிக்கிறது.
வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தடையையும் விதித்துவிட்டு, பேச்சுவார்த்தை நடத்த அழைப்பும் விடுப்பதாக அமெரிக்கா கூறுவதன் மூலம், அந்த நாடு பொய் சொல்கிறது என்பதை நன்றாகப் புரிந்து கொள்ள முடிகிறது.
இது ஒருபுறம் என்றால், ஈரான் மதத் தலைவர் அயதுல்லா கமேனி மீதும் அமெரிக்கா தடை விதித்துள்ளது கேலிக்குரியதாக உள்ளது.
குறிப்பிட்ட அளவுக்கு சொத்துகள் ஏதும் வைத்திராத, அமெரிக்காவுக்குச் செல்லும் எண்ணமே இல்லாத மதத் தலைவர் மீது தடை விதிப்பதன் நோக்கத்தை விளங்கிக் கொள்ள முடியவில்லை.
உண்மையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நாங்கள் தயாராகத்தான் இருக்கிறோம். ஆனால், அந்த நாடுதான் அதற்குத் தயாராக இல்லை. அமெரிக்கா விரும்பினால், நாங்கள் நிச்சயம் அந்த நாட்டுடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் என்றார் ரெளஹானி.
வல்லரசு நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டில் கையெழுத்தான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக அதிபர் டிரம்ப் கடந்த ஆண்டு அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, அந்த ஒப்பந்தம் காரணமாக விலக்கப்பட்டிருந்த ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அவர் மீண்டும் அமல்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்து நடைபெற்ற சம்பவங்களால் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வந்த சூழலில், அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் கடந்த வாரம் சுட்டு வீழ்த்தியது. அதற்குப் பதிலடியாக ஈரான் மீது வான்வழித் தாக்குதல் நடத்த டிரம்ப் உத்தரவிட்டு, பிறகு அந்த உத்தரவை பிறகு  வாபஸ் பெற்றார்.
எனினும், ஈரான் மதத் தலைவர் அயதுல்லா கமேனி மற்றும் அந்த நாட்டு ராணுவ உயரதிகாரிகள் மீது பொருளாதார மற்றும் பயணத் தடை விதிப்பதாக அமெரிக்கா திங்கள்கிழமை அறிவித்தது. மேலும், ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜாவத் ஷரீஃப் மீதும் தடை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், அதிபர் ஹஸன் ரெளஹானி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com