ஜின்ஜியாங்கில் சீன அடக்குமுறை குறித்து முஸ்லிம் நாடுகள் மெளனம்: அமெரிக்கா அதிருப்தி

சீனாவில் சிறுபான்மையினரான முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் அடக்குமுறை குறித்து முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பு மெளனம் காப்பது அதிருப்தியளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஜின்ஜியாங்கில் சீன அடக்குமுறை குறித்து முஸ்லிம் நாடுகள் மெளனம்: அமெரிக்கா அதிருப்தி


சீனாவில் சிறுபான்மையினரான முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் அடக்குமுறை குறித்து முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பு மெளனம் காப்பது அதிருப்தியளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் சர்வேதச குற்றப் பிரிவின் தலைவரும், ஐ.நா.வுக்கான அமெரிக்க துணைத் தூதருமான கெல்லி கர்ரி ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் கூறியதாவது:
சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் முஸ்லிம்கள் மீது அந்த நாட்டு அரசு அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
எனினும், சர்வதேச முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பான ஓஐசி இதுகுறித்து மெளனம் காப்பது அதிருப்தி அளிப்பதாக உள்ளது.
இந்த விவகாரத்தில் சீனாவுக்கு துருக்கி கண்டனம் தெரிவித்திருப்பது பாராட்டத்தக்கதாகும். எனினும், ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்கர் இன முஸ்லிம்களின் மத உரிமைகள் நசுக்கப்படுவது குறித்து ஓஐசி அமைப்பு கண்டனம் தெரிவிக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்திருந்தோம் என்றார் அவர்.
சீனாவில் முஸ்லிம்கள் தடுப்பு முகாமில் கட்டாயமாக அடைத்து வைக்கப்படும் விவகாரம் குறித்து ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகத்தில் அமெரிக்கா தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு முன்னதாக கெல்லி கர்ரி செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.
சீனா எதிர்ப்பு: உய்கர் முஸ்லிம்கள் தொடர்பாக ஜெனீவாவில் அமெரிக்கா கூட்டம் நடத்தியுள்ளதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சீன தூதரக அதிகாரி ஒருவர் கூறுகையில், அரசியல் உள்நோக்கத்துடன் அந்தக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
ஜின்ஜியாங் மாகாணத்தில் பிரிவினைவாதத்துக்கும், மத தீவிரவாதத்துக்கும் எதிராக சீனா போராடி வருவதாகக் குறிப்பிட்ட அவர், சீனாவில் தடுப்பு முகாம்கள் எதுவும் இல்லை என்று கூறினார்.
ஹன் இனத்தைப் பெரும்பான்மையாகக் கொண்ட சீனாவில், ஜின்ஜியாங் மாகாணத்தில் மட்டும் முஸ்லிம் இனத்தவர் அதிக அளவில் வசித்து வருகின்றனர். 
இந்தச் சூழலில், அந்த மாகாணத்தைச் சேர்ந்த பிரிவினைவாதிகள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதாக சீன அரசு குற்றம் சாட்டி வருகிறது.
எனவே, மக்களை நல்வழிப்படுத்துவதற்காக அவர்களுக்கு சீர்திருத்த வகுப்புகள் நடத்துவதாகக் கூறி, லட்சக்கணக்கான முஸ்லிம்களை அந்த நாட்டு அரசு தடுப்பு முகாமில் அடைத்து வைத்துள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.
எந்த வித குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்படாமலேயே முகாம்களில் அடைத்து வைக்கப்படும் அவர்களது இருப்பிடம் குறித்து அவர்களது குடும்பத்தினரிடம் அரசு தெரியப்படுத்துவதில்லை.
அங்கு சீர்திருத்தக் கல்வி என்ற பெயரில், அவர்கள் இஸ்லாம் மதத்தைக் கைவிடவும், கம்யூனிஸக் கொள்கைகளை வலுக்கட்டாயமாக ஏற்கவும் செய்வதற்கான நோக்கில் பிரசார வகுப்புகள் நடத்தப்படுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
அத்தகைய முகாம்களில் 10 லட்சம் உய்கர், கஜக் மற்றும் பிற இனத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பேயோ அண்மையில் அறிவித்தார்.
இந்தச் சூழலில், இதுதொடர்பாக ஜெனீவாவில் அமெரிக்கா நடத்திய கூட்டத்துக்கு முன்னதாக ஐ.நா.வுக்கான அந்த நாட்டு துணைத் தூதர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com