நியூஸிலாந்தில் 2 மசூதிகளில் துப்பாக்கிச்சூடு: 49 பேர் பலி

நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள இரண்டு மசூதிகளுக்குள் புகுந்து மர்ம நபர்கள் வெள்ளிக்கிழமை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 49 பேர் பலியாகினர். 48 பேர் பலத்த காயமடைந்தனர்.
நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்தவரை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பணியாளர்கள்.
நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்தவரை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பணியாளர்கள்.


நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள இரண்டு மசூதிகளுக்குள் புகுந்து மர்ம நபர்கள் வெள்ளிக்கிழமை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 49 பேர் பலியாகினர். 48 பேர் பலத்த காயமடைந்தனர்.
மேற்குலக நாடுகளில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்டுள்ள மிக மோசமான தாக்குதலாக இது கருதப்படுகிறது. பலியானவர்கள் மிக அருகில் இருந்து சுடப்பட்டுள்ளனர். அவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர்.
தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வலதுசாரி பயங்கரவாதி என்று அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மாரிஸான் தெரிவித்துள்ளார். நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் இதுகுறித்து கூறும்போது, தங்கள் நாட்டின் கருப்பு தினங்களில் ஒன்றாக இது அமைந்துவிட்டது என்றார். 
மசூதிகளில் நடத்தப்பட்டிருப்பது நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதல் என்றே தோன்றுவதாகவும், அதை பயங்கரவாதத் தாக்குதல் என்றுதான் குறிப்பிட வேண்டும் என்றும் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்தார். பலியானவர்களில் பலர் நியூஸிலாந்துக்கு குடிபெயர்ந்து வந்தவர்கள் மற்றும் அகதிகள் என்பதையும் பிரதமர் உறுதி செய்துள்ளார்.
இந்தத் தாக்குதல் தொடர்பாக ஒரு பெண் உள்பட மூன்று பேரை தடுப்புக் காவலில் வைத்துள்ளதாகவும், மற்றொரு நபரை கைது செய்திருப்பதாகவும் நியூஸிலாந்து அரசு தெரிவித்துள்ளது. சம்பவ இடத்தில் இரண்டு சக்திவாய்ந்த வெடிகுண்டுகளைக் கண்டறிந்த நியூஸிலாந்து ராணுவம், அவற்றைச் செயலிழக்கச் செய்தது.
சமூகவலைதளத்தில் நேரலை:  முன்னதாக, மசூதிகளில் துப்பாக்கிச்சூடு நடைபெறும் காட்சிகள் முகநூலில் நேரலையாக ஒளிபரப்பாகின. அவை வேகமாகப் பகிரப்பட்டன. அதைக் கண்டு பீதியடைந்த மக்கள், தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியே வரவில்லை. 
தாக்குதலை நடத்திய நபரே, இந்தக் காட்சிகளை நேரலை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அந்த விடியோவில், காரில் வரும் மர்ம நபர் மசூதிக்குள் நுழைந்து தாக்குதலை நடத்திவிட்டு, சாவகாசமாக வெளியேறி மீண்டும் காரில் தப்பிச் செல்வது வரை பதிவாகியுள்ளது.
அதே சமயம், அந்த விடியோ பதிவை யாரும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று நியூஸிலாந்து காவல்துறை கேட்டுக் கொண்டது.
நாடெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் மசூதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்தது.
நேரில் கண்ட சாட்சிகள்: மர்ம நபர்களின் துப்பாக்கிச்சூட்டை நேரில் கண்டவர்கள், அதை மிரட்சியுடன் விவரித்தனர். மசூதியில் இருந்த பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஒருவர் இதுகுறித்து கூறும்போது, 3 துப்பாக்கி குண்டுகள் சட்டென வெடிக்கும் சத்தம் கேட்டது. 10 விநாடி இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அது தொடர்ந்தது. மக்கள் அலறியடித்து ஓடத் தொடங்கினர் என்றார்.
ஒரு சிலர், தங்கள் மனைவி அல்லது குழந்தைகள் கண்ணெதிரே சுட்டு வீழ்த்தப்பட்டதை பார்த்ததாகத் தெரிவித்தனர். எங்கு காணினும் ரத்த வெள்ளமாக இருந்தது என்று நியூஸிலாந்து வானொலிக்கு ஒருவர் தகவல் அளித்தார்.
மசூதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர்கள் எவரேனும் பாதிக்கப்பட்டிருந்தால், உதவிக்கு தொடர்பு கொள்ளலாம் என்று நியூஸிலாந்தில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

தலைவர்கள் கண்டனம்  
பிரதமர் நரேந்திர மோடி: 
மிகக் கொடுமையான பயங்கரவாதத் தாக்குதலில் அப்பாவிகள் பலியாகியிருப்பது  அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.  பயங்கரவாதத்துக்கும், வன்முறைக்கும் ஆதரவாக இருப்போருக்கு இந்தியாவின் சார்பில் கடும் கண்டனங்கள்.
அமெரிக்க அதிபர் டிரம்ப்: மசூதிகளில் நடத்தப்பட்டுள்ள கொடூரமிக்க படுகொலைகளுக்காக நியூஸிலாந்து மக்களுக்கு மிகுந்த அனுதாபங்கள். நியூஸிலாந்துக்கு அமெரிக்கா அனைத்து வகையிலும் துணை நிற்கும்.

இந்தியர் காயம்; மற்றொருவர் மாயம்
நியூஸிலாந்து மசூதிகளில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாதைச் சேர்ந்த ஒருவரும் காயமடைந்துள்ளார். அதே நகரத்தைச் சேர்ந்த மற்றொரு நபர் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பிறகு காணாமல் போயுள்ளார்.
ஹைதராபாதின் அம்பர்பேட் பகுதியைச் சேர்ந்த அகமது இக்பால் ஜஹாங்கிர் (35), மசூதியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார். இதுகுறித்து அவரது சகோதரர் குர்ஷீத் ஜஹாங்கிர் கூறுகையில், அகமதுவின் மார்பில் தோட்டா துளைப்பதை அந்த நேரலை விடியோவில் பார்த்தோம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அவரது நண்பர்களும், நியூஸிலாந்தைச் சேர்ந்தவர்களுமான இருவர் உயிரிழந்தனர் என்றார்.  அகமது, கிறைஸ்ட்சர்ச் பகுதியில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். 
அதேபோல், ஹைதராபாதைச் சேர்ந்த ஃபர்ஹாஜ் அசன் என்பவரும் சம்பவத்தின்போது அதே மசூதியில் இருந்துள்ளார். எனினும், துப்பாக்கிச் சூடுக்குப் பிறகு அவர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.

தப்பிய வங்கதேச அணி
 நியூஸிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணியினர், தொழுகை நடத்துவதற்காக விடுதியில் இருந்து புறப்பட்டு மசூதி இருக்கும் இடத்தை அடைந்தனர். ஆனால், திடீர் தாக்குதல் குறித்து அறிந்தவுடன் பதற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
கிரிக்கெட் வீரர்கள், தாங்கள் தங்கியிருக்கும் விடுதிக்கு பத்திரமாக திரும்பிச் சென்றதை வங்கதேச கிரிக்கெட் வாரியம் உறுதி செய்தது.
இந்தத் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, வங்கதேச அணியினர் பங்கேற்கவிருந்த போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. 

சம்பவ இடத்தில் குவிக்கப்பட்ட காவல்துறையினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com