மாலி ராணுவ முகாமில் தாக்குதல்: 21 வீரர்கள் பலி

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ராணுவ முகாம் ஒன்றில் பயங்கரவாதிகள் திடீரென புகுந்து நடத்திய தாக்குதலில் 21 வீரர்கள் பலியாகினர்.


மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ராணுவ முகாம் ஒன்றில் பயங்கரவாதிகள் திடீரென புகுந்து நடத்திய தாக்குதலில் 21 வீரர்கள் பலியாகினர்.
இதுதொடர்பாக அந்நாட்டு ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது: மோப்தி பகுதியில் உள்ள டியோரா ராணுவ முகாமுக்குள் அதிகாலை நேரத்தில் கார்கள் மற்றும் இருசக்கர வாகங்களில் திடீரென நுழைந்த பயங்கரவாதிகள், ராணுவ வீரர்களை நோக்கி சரமாரியாகச் சுட்டு தாக்குதல் நடத்தினர். 
இதில் ராணுவ வீரர்கள் 21 பேர் கொல்லப்பட்டனர். ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்தனர். இதில் பயங்கரவாதிகளில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
மாலி ராணுவத்தில் இருந்து தப்பியோடிய முன்னாள் அதிகாரியான பா ஆக் மூசா தலைமையில் செயல்படும் பயங்கரவாத குழுவினர் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலால் ராணுவ முகாமில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது என்று அந்த வட்டாரங்கள் கூறின.
தாக்குதல் தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்ட மாலி அதிபர் இப்ராஹிம் பூபக்கர் கெய்ட்டா, இதுபோன்ற பயங்கரவாதச் செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாலி மக்கள் ஒற்றுமையுடன் இருப்பார்கள் என்று கூறினார். 
கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் மாதம் மாலி அரசு ஆயுதக் குழுக்களுடன் அமைதிக்கான ஒப்பந்தம் மேற்கொண்டது. எனினும், சில ஜிஹாதிகள் அதற்கு உடன்படாத வகையில் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். ஐ.நா. அமைதிப்படை, பிரான்ஸ் ராணுவம், 5 நாடுகளின் கூட்டு ராணுவம் ஆகியவை மாலியில் இருந்தும் ஜிஹாதிகள் தங்களது வன்முறையை தொடர்ந்து வருகின்றனர்.
சர்வதேச அளவிலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலும், மாலியில் பாதுகாப்புச் சூழ்நிலை மோசமடைந்து வருவதாக ஐ.நா. பொதுச் செயலர் அண்டோனியோ குட்டெரெஸ் கவலை தெரிவித்துள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com