மெக்ஸிகோ எல்லைச் சுவர் எழுப்ப ரூ.6,800 கோடி ஒதுக்கீடு: ஜனநாயகக் கட்சியினர் கடும் எதிர்ப்பு

மெக்ஸிகோ எல்லையில் சர்ச்சைக்குரிய தடுப்புச் சுவர் எழுப்புவதற்காக அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சகம் 100 கோடி டாலர் (சுமார் ரூ.6,800 கோடி) ஒதுக்கீடு செய்துள்ளது.
மெக்ஸிகோ எல்லைச் சுவர் எழுப்ப ரூ.6,800 கோடி ஒதுக்கீடு: ஜனநாயகக் கட்சியினர் கடும் எதிர்ப்பு


மெக்ஸிகோ எல்லையில் சர்ச்சைக்குரிய தடுப்புச் சுவர் எழுப்புவதற்காக அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சகம் 100 கோடி டாலர் (சுமார் ரூ.6,800 கோடி) ஒதுக்கீடு செய்துள்ளது.
நாடாளுமன்ற அனுமதியில்லாமலேயே எல்லைச் சுவர் எழுப்பவதற்கான நிதியைப் பெறும் வகையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் அவசர நிலை அறிவித்ததற்குப் பிறகு முதல் முறையாக இந்தத் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு, ஜனநாயகக் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
மெக்ஸிகோ எல்லையில் 92 கி.மீ.க்கு தடுப்பு வேலி அமைக்கவும், சாலைகளை மேம்ப்படுத்துவதற்கும் பாதுகாப்புக்கான பட்ஜெட்டிலிருந்து 100 கோடி டாலரை ஒதுக்கீடு செய்துள்ளதாக நாடாளுமன்றத்திடம் திங்கள்கிழமை சமர்ப்பித்துள்ள அறிவிக்கையில் பாதுகாப்புத் துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
இந்தப் பணிகளை திட்டமிட்டு நிறைவேற்றுமாறு ராணுவ பொறியாளர் பிரிவுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மெக்ஸிகோவையொட்டிய யூமா மற்றும் எல் பாúஸா பகுதிகள் வழியாக 18 அடி உயரத்துக்கு தடுப்பு வேலி அமைக்க பாதுகாப்புத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக சிஎன்என் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
எம்.பி.க்கள் எதிர்ப்பு: எல்லைச் சுவருக்கு 100 கோடி டாலர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, இடைக்கால பாதுகாப்புத் துறை அமைச்சர் பேட்ரிக் ஷானஹனுக்கு நாடாளுமன்ற முன்னாள் ராணுவ வீரர்கள் விவகாரக் குழுவைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் எழுதியுள்ள கடிதத்தில், பாதுகாப்புக்கான நாடாளுமன்றக் குழுக்களின் அனுமதி இல்லாமல் எல்லைச் சுவர் எழுப்புவதற்காக 100 கோடி டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது விதிமுறைகளுக்கு எதிரனது என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுபோன்ற அரசியல் தலையீடு காரணமாக தேவையில்லாத திட்டங்களில் கவனம் சிதறிக்கப்படுவதால், ராணுவத்தின் தயார் நிலை பாதிக்கப்படும் என்று அவர்கள் கவலை தெரிவித்தனர்.
மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவுக்குள் அகதிகள் வருவதைத் தடுக்கும் வகையில், எல்லை நெடுகிலும் தடுப்புச் சுவர் எழுப்புவதற்காக பட்ஜெட்டில் 570 கோடி டாலர் (சுமார் ரூ.40,300 கோடி) 
நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வந்தார். அதற்கு ஜனநாயகக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 
இதன் காரணமாக பட்ஜெட் மசோதா நிறைவேற்றப்படாததால், பல்வேறு முக்கிய அரசுத் துறைகளும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22-ஆம் தேதியிலிருந்து முடக்கப்பட்டன.
அமெரிக்க வரலாற்றிலேயே மிக அதிக நாள்களுக்கு நீடித்த இந்த அரசுத் துறைகள் முடக்கத்தின் விளைவாக, 8 லட்சம் அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், மெக்ஸிகோ எல்லைச் சுவருக்கு நிதி ஒதுக்கீடு இல்லாமலேயே, அரசுத் துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை ஏற்க அதிபர் டிரம்ப் சம்மதித்தார்.
அதனைத் தொடர்ந்து, முடக்கப்பட்டிருந்த அரசுத் துறைகள் அனைத்தும் மீண்டும் செயல்படத் தொடங்கின.
எனினும், எல்லைச் சுவருக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் குடியரசுக் கட்சியினருக்கும், ஜனநாயகக் கட்சியினருக்கும் இடையே இழுபறி நீடித்து வந்தது.
இந்தச் சூழலில், எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்பவதற்கு நாடாளுமன்ற அனுமதியில்லாமலேயே நிதி ஒதுக்கீடு செய்வதற்கு வழிவகுக்கும் வகையில், அதிபர் டிரம்ப் கடந்த மாதம் 15-ஆம் தேதி அவசர நிலையை அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக, எல்லைச் சுவர் எழுப்புவதற்காக பாதுகாப்புத் துறை தற்போது 100 கோடி டாலர் ஒதுக்கீடு செய்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com