வறட்சியின் பிடியில் வட கொரியா!

கடும் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள வட கொரியாவுக்கு கூடிய விரைவில் உணவுப் பொருள்கள் வழங்கி உதவ உள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.  

கடும் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள வட கொரியாவுக்கு கூடிய விரைவில் உணவுப் பொருள்கள் வழங்கி உதவ உள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.  
மழையின் அளவு பெரிதும் குறைந்த காரணத்தால், கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வட கொரியாவில் வறட்சி நிலவுகிறது. நாட்டில் விளைச்சலும் குறைந்துள்ளதால் மிகக் கடுமையான உணவுப் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதையடுத்து, தங்களுக்கு உடனடியாக உணவுப்பொருள் வழங்கி உதவ வேண்டும் என்று ஐ.நா.வில் வட கொரிய தூதர் கிம் சாங் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், பன்னாட்டு அமைப்புகளின் உதவியைப் பெற்று வடகொரியாவுக்கு விரைவில் உதவ உள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, தென் கொரிய அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ""ஐ.நா. உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகளிடம் தென் கொரியா ஆலோசனை நடத்தி வருகிறது. வட கொரியக் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் விரைவில் உணவு வழங்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாகத் தென் கொரிய நாட்டு மக்களிடமும் பன்னாட்டு நிறுவனங்களிடமும் நிதி திரட்டப்பட்டு வருகிறது. ரூ.56 கோடி மதிப்பிலான உணவுப்பொருள்களை வட கொரியாவுக்கு அனுப்ப தென் கொரியா திட்டமிட்டுள்ளது'' என்றார்.
இதனிடையே, ""வட கொரியாவுக்கு அளிக்கப்படும் உதவி, இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த உதவும்'' என தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் தெரிவித்துள்ளார். வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோரிடையே கடந்த பிப்ரவரி மாதம் வியத்நாம் தலைநகர் ஹனோயில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதையடுத்து, ஏவுகணைச் சோதனைகளை வட கொரியா மீண்டும் தொடங்கியுள்ளது. இதனால், தென் கொரிய மக்களும் வட கொரியா மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இதற்கு முன்னதாக, கடந்த 2010-ஆம் ஆண்டு வட கொரியாவுக்கு தென் கொரியா உணவுப் பொருள்களை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com