வெனிசூலா அரசுடன் சமாதானப் பேச்சுவார்த்தை: ஜுவான் குவாய்டோ சம்மதம்

அரசியல் பதற்றம் நிலவி வரும் வெனிசூலாவில் அமைதியை ஏற்படுத்துவதற்காக  நார்வேயில் நடைபெறவிருக்கும் சமாதானப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கவிருப்பதாக தேசிய நாடாளுமன்றத் தலைவரும்
வெனிசூலா அரசுடன் சமாதானப் பேச்சுவார்த்தை: ஜுவான் குவாய்டோ சம்மதம்

அரசியல் பதற்றம் நிலவி வரும் வெனிசூலாவில் அமைதியை ஏற்படுத்துவதற்காக  நார்வேயில் நடைபெறவிருக்கும் சமாதானப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கவிருப்பதாக தேசிய நாடாளுமன்றத் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஜுவான் குவாய்டோ அறிவித்துள்ளார்.
அந்தப் பேச்சுவார்த்தைக்காக, அரசு மற்றும் எதிர்க்கட்சித் தரப்பு பிரதிநிதிகள் தனித் தனியாக நார்வே சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து வெனிசூலாவின் கரோரா நகரில் தனது ஆதரவாளர்களிடையே எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் குவாய்டோ சனிக்கிழமை கூறியதாவது: நார்வேயில் நடைபெறவிருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக எங்களது பிரதிநிதிகள் அந்த நாட்டுக்குச் சென்றுள்ளனர்.
அங்கு நார்வே தூதுக் குழுவுடனும், வெனிசூலா அரசுப் பிரதிநிதிகளுடனும் அடுத்த வாரம் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் என்றார் அவர்.
முதல்கட்ட பேச்சுவார்த்தையில், வெனிசூலா அரசு தரப்பில் அந்த நாட்டு தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் ரோட்ரிகியூயஸ் மற்றும் மிரிண்டா மாகாண ஆளுநர் ஹெக்டர் ரோட்ரிகியூயஸ் பங்கேற்கவிருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மடூரோ தலைமையிலான அரசுக்கு எதிராக பல மாதங்களாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அரசுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்துவதை பெரும்பாலான எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.  
இந்தச் சூழலில், நார்வே அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கவிருப்பதாக ஜுவான் குவாய்டோ அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெனிசூலாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாகக் குற்றம் சாட்டி வரும் குவாய்டோ, மீண்டும் அந்தத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும், அதுவரை நாட்டின் இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்பதாகவும் கடந்த ஜனவரி மாதம் அறிவித்தார். அவருக்கு அமெரிக்கா உள்பட 50-க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கீகாரம் அளித்தன.
எனினும், அதிபர் மடூரோவுக்கு ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com