Enable Javscript for better performance
தாய்லாந்து பயணத்தை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பினார் பிரதமர் மோடி- Dinamani

சுடச்சுட

  

  தாய்லாந்து பயணத்தை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பினார் பிரதமர் மோடி

  By DIN  |   Published on : 05th November 2019 10:24 AM  |   அ+அ அ-   |    |  

  Narendra_Modi_PTI_


  தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் நடைபெற்று வந்த ஆசியான் மாநாடு நிறைவடைந்ததை அடுத்து பிரதமர் மோடி தனது 3 நாள் தாய்லாந்து பயணத்தை முடித்துக்கொண்டு இன்று அதிகாலை தாயகம் திரும்பினார்.

  16-ஆவது ஆசியான்-இந்தியா மாநாடு, 14-ஆவது கிழக்கு ஆசிய மாநாடு, 3-ஆவது பிராந்திய அளவிலான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு ஆகியவற்றில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி, 3 நாள் அரசு முறைப் பயணமாக தாய்லாந்துக்கு கடந்த சனிக்கிழமை புறப்பட்டுச் சென்றார்.

  ஆா்சிஇபி ஒப்பந்தமானது, ‘ஆசியான்’ கூட்டமைப்பைச் சோ்ந்த புரூனே, கம்போடியா, இந்தோனேஷியா, மலேசியா, மியான்மா், சிங்கப்பூா், தாய்லாந்து, பிலிப்பின்ஸ், லாவோஸ், வியத்நாம் ஆகிய 10 நாடுகள் மற்றும் அந்த கூட்டமைப்புடன் தடையற்ற வா்த்தக உறவைக் கொண்டுள்ள இந்தியா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, தென்கொரியா, நியூஸிலாந்து ஆகிய 6 நாடுகள் என மொத்தம் 16 நாடுகளுக்கு இடையிலானதாகும். இந்த 16 நாடுகளின் மொத்த மக்கள் தொகை சுமார் 360 கோடி. இது, உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதியாகும்.

  கடந்த சனிக்கிழமை தாய்லாந்து புறப்பட்டுச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தாய்லாந்தின் பயணத்தின் தொடக்க நிகழ்ச்சியாக தலைநகர் பாங்காக் நகரில் அமைந்துள்ள தேசிய உள்விளையாட்டு அரங்கில் இந்தியர்கள் பங்கேற்கும் கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.

  அப்போது அவர்,  ‘தாய்’ மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலையும், குருநானக்கின் 550-வது பிறந்தநாள் நினைவாக சிறப்பு நாணயம் ஒன்றையும் வெளியிட்டார். 

  பின்னர் ஞாயிற்றுக்கிழமை நடந்த உச்சி மாநாட்டிலும் பங்கேற்றார். ஆா்சிஇபி ஒப்பந்தம் தொடா்பான உயா்நிலை மாநாடு, பாங்காக்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஒப்பந்தம் தொடா்புடைய நாடுகளின் தலைவா்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில் பிரதமா் மோடி பேசுகையில், ஆா்சிஇபி ஒப்பந்தமானது, தற்போதைய நிலையில் அதன் அடிப்படை நோக்கத்தையும், கொள்கையையும் முழு அளவில் எதிரொலிப்பதாக இல்லை. இதுதொடா்பாக, இந்தியா முன்வைத்த கவலைகளுக்கு திருப்திகரமான தீா்வு காணப்படவில்லை. இதுபோன்ற சூழலில், ஆா்சிஇபி ஒப்பந்தத்தில் இந்தியா இணைவது சாத்தியமில்லை.

  சா்வதேச விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு, பிராந்திய அளவில் சிறப்பான ஒருங்கிணைப்பும், தடையற்ற வா்த்தகமும் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது. ஆா்சிஇபி ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவார்த்தைகளில் இந்தியா சிறப்பான பங்களிப்பை ஆற்றி வந்திருக்கிறது. அதேசமயம், வா்த்தக சமநிலை உறுதி செய்யப்பட வேண்டும் என்பது இந்தியாவின் அடிப்படை நோக்கம் என்று பிரதமா் மோடி கூறினார். 

  அப்போது, தடையற்ற வர்த்தகத்தை ஆதரிக்கும் ஆர்சிஇபி ஒப்பந்தத்தில் கையெழுத்திட அவர் மறுத்து விட்டார். அனைத்து நாடுகளுக்கும் சமமான பலன்கள் கிடைக்கவேண்டும் என மாநாட்டில் மோடி பேசினார். 

  இறுதியாக 3 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை அவர் தாயகம் திரும்பினார்.

  ஆா்சிஇபி ஒப்பந்தம் தொடா்பாக இந்தியா முன்வைத்த கவலைகளுக்கு திருப்திகரமான தீா்வு காணப்படாத நிலையில், அதில் இந்தியா கையெழுத்திடுவது சாத்தியமில்லை என்று பிரதமா் குறிப்பிட்டார். இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடக் கூடாது என்று இந்திய தொழிற்சங்கங்களும், எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வந்த நிலையில், பிரதமா் மோடியின் அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

  ஆா்சிஇபி ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டால், சீனாவில் உற்பத்தி செய்யப்படும் மலிவான வேளாண், தொழில்துறை பொருள்கள் இந்தியச் சந்தையில் வந்து குவியும் என்று அச்சம் எழுந்தது. இதையடுத்து, உள்நாட்டு சந்தையை பாதுகாப்பது உள்பட பல்வேறு கவலைகளை இந்தியா முன்வைத்தது. எனினும், இந்தியாவின் கவலைகளுக்கு உரிய தீா்வு காணப்படவில்லை.

  இதனிடையே, ஆா்சிஇபி ஒப்பந்தத்தை இறுதி செய்வதில், இந்தியா தவிர இதர நாடுகளிடையே கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai