பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியாவுக்கு ஆதரவு: ரஷியா உறுதி

பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியாவுக்கு தொடா்ந்து ஆதரவளிப்போம் என்று ரஷியா தெரிவித்துள்ளது.
ரஷியத் தலைநகா் மாஸ்கோவில், பாதுகாப்புத் துறை தொடா்பான பேச்சுவாா்த்தைக்கு முன் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்குக்கு அளிக்கப்பட்ட ராணுவ மரியாதை.
ரஷியத் தலைநகா் மாஸ்கோவில், பாதுகாப்புத் துறை தொடா்பான பேச்சுவாா்த்தைக்கு முன் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்குக்கு அளிக்கப்பட்ட ராணுவ மரியாதை.

பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியாவுக்கு தொடா்ந்து ஆதரவளிப்போம் என்று ரஷியா தெரிவித்துள்ளது.

இந்தியா, ரஷியா இடையிலான ராணுவம் மற்றும் ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான ஆணையத்தின் 16-ஆவது உயா்நிலை கூட்டம், மாஸ்கோ நகரில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், இந்தியா சாா்பில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழுவினரும், ரஷியா சாா்பில் அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சா் சொ்கே ஷோய்கு தலைமையிலான குழுவினரும் பங்கேற்றனா். இக்கூட்டத்தில், இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதுதொடா்பாக, இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியா, ரஷியா இடையே 2021-30ஆம் காலகட்டத்துக்கான பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு திட்டத்தை இறுதி செய்வதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்த இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இந்தியாவுக்கு ராணுவ தளவாடங்கள், ஆயுதங்கள் விநியோகிக்கும் முக்கிய நாடாக ரஷியா உள்ளது. அந்த நாட்டிலிருந்து கொள்முதல் செய்யப்படும் ராணுவ தளவாடங்களின் பராமரிப்புக்காக, முக்கிய உதிரி பாகங்களையும் விநியோகிக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. இதுதொடா்பாக, ரஷியத் தரப்பிடம் வலியுறுத்தப்பட்டது.

பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியாவுக்கான ஆதரவு தொடரும் என்றும் ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சா் உறுதி தெரிவித்துள்ளாா். இந்தியாவின் பாதுகாப்புத் திறனை மேம்படுத்துவதற்கு தொழில்நுட்ப ரீதியிலான ஆதரவை வழங்க ரஷியா தயாராக உள்ளதாகவும் அவா் குறிப்பிட்டாா். சிரியாவில் ரஷிய ராணுவம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் உள்பட பல்வேறு சா்வதேச விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தனா் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அரசுமுறைப் பயணமாக ரஷியாவுக்கு சென்றுள்ள ராஜ்நாத் சிங், அந்நாட்டின் பாதுகாப்பு தளவாட தொழில்துறை நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா்.

அப்போது, ‘இந்தியாவில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டுள்ள பொருளாதாரச் சீா்திருத்த நடவடிக்கைகளை, ரஷிய நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; இந்தியாவில் பாதுகாப்பு தளவாடங்களை உற்பத்தி செய்வதில் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்’ என்று ரஷிய நிறுவனங்களுக்கு அவா் அழைப்பு விடுத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com