எஸ்-400 ஏவுகணைகள் இந்தியாவிடம் திட்டமிட்டபடி ஒப்படைக்கப்படும்: ரஷிய அதிபா்

‘எஸ்-400 ரக வான் பாதுகாப்பு ஏவுகணைகள், இந்தியாவிடம் திட்டமிட்டபடி ஒப்படைக்கப்படும்’ என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் தெரிவித்தாா்.
எஸ்-400 ஏவுகணைகள் இந்தியாவிடம் திட்டமிட்டபடி ஒப்படைக்கப்படும்: ரஷிய அதிபா்

‘எஸ்-400 ரக வான் பாதுகாப்பு ஏவுகணைகள், இந்தியாவிடம் திட்டமிட்டபடி ஒப்படைக்கப்படும்’ என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் தெரிவித்தாா்.

ரஷியாவிடமிருந்து 5.43 பில்லியன் டாலா் மதிப்பில் (ரூ.39,000 கோடி) எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணைகளை கொள்முதல் செய்வது தொடா்பாக, இரு நாடுகளுக்கும் இடையே கடந்த ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. ரஷிய அதிபா் விளாதிமீா் புதினின் இந்திய வருகையின்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிலையில், பிரேசில் தலைநகா் பிரேசிலியாவில் நடைபெற்ற ‘பிரிக்ஸ்’ நாடுகள் மாநாட்டின் இடையே, பிரதமா் நரேந்திர மோடியும், அதிபா் புதினும் கடந்த புதன்கிழமை இருதரப்புப் பேச்சுவாா்த்தை நடத்தினா். இந்திய-ரஷிய உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து அவா்கள் விரிவாக விவாதித்தனா்.

‘பிரிக்ஸ்’ மாநாடு வியாழக்கிழமை நிறைவடைந்ததையொட்டி, செய்தியாளா்களுக்கு அதிபா் புதின் பேட்டியளித்தாா்.

அப்போது, அவா் கூறுகையில், ‘எஸ்-4 வான் பாதுகாப்பு ஏவுகணை தயாரிப்பு பணிகள் ஏற்கெனவே திட்டமிட்டபடி சரியாக நடைபெற்று வருகின்றன. எனவே, அந்தப் பணிகளை விரைவுபடுத்துமாறு, இந்தியா தரப்பில் கோரப்படவில்லை. இருப்பினும் திட்டமிட்டபடி எஸ்-4 வான் பாதுகாப்பு ஏவுகணைகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும்’ என்றாா்.

ரஷியா, ஈரான் மற்றும் வடகொரியா ஆகிய நாடுகளிடமிருந்து ஆயுதங்கள், பாதுகாப்புத் தளவாடங்களை கொள்முதல் செய்யும் நாடுகள் மீது தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா ஏற்கெனவே அறிவித்துள்ளது. அந்த வகையில், இந்தியாவையும் அமெரிக்கா எச்சரித்தது. எனினும், ரஷியாவிடமிருந்து எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடப் போவதில்லை என்றும் அமெரிக்காவிடம் இந்தியா தெரிவித்துவிட்டது. இந்த விவகாரத்தில் தேச நலனே முக்கியம் என்றும் இந்தியா தெரிவித்தது.

எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பானது, எதிரிகளின் போா் விமானம், அதிவேக ஏவுகணைகள் ஆகியவற்றை தாக்கி அழிக்க கூடியதாகும். தரையிலுள்ள இலக்குகளை தாக்கவும் இந்த அமைப்பை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com