ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடி: ஹமாஸ் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு

பாலஸ்தீனத்திலிருந்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஹமாஸ் நிலைகள் மீது இஸ்ரேல் சனிக்கிழமை குண்டுவீச்சு நடத்தியது.
காஸாவில் இஸ்ரேல் தாக்குதலால் சேதமடைந்த வீடு.
காஸாவில் இஸ்ரேல் தாக்குதலால் சேதமடைந்த வீடு.

காஸா சிட்டி: பாலஸ்தீனத்திலிருந்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஹமாஸ் நிலைகள் மீது இஸ்ரேல் சனிக்கிழமை குண்டுவீச்சு நடத்தியது.

காஸாவில் பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் (பிஐஜே) அமைப்பின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இஸ்ரேலுக்கும், அந்த அமைப்புக்கும் இந்த வாரம் நடந்த மோதலில் ஹமாஸ் அமைப்பு இதுவரை தலையிடாமல் இருந்து வந்தது.

இந்த இடைவெளிக்குப் பிறகு தற்போது முதல் முறையாக ஹமாஸ் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஹமாஸ் கட்டுப்பாட்டிலுள்ள காஸா பகுதியிலிருந்து இரு ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி வீசப்பட்டன. அந்த இரு ஏவுகணைகளும் இஸ்ரேலின் வான்பாதுகாப்பு ஏவுகணைகள் மூலம் இடைமறித்து அழிக்கப்பட்டன.

இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, காஸாவின் வடக்குப் பகுதியில் உள்ள இரு ஹமாஸ் நிலைகள் மீது இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் நடத்தின.

அத்துடன், பயங்கரவாதிகளின் சுரங்க அமைப்பு ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சண்டை நிறுத்தம் மீறல்: ஹமாஸ் நிலைகள் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசிய உடனேயே, அதற்கு எதிா்வினையாக பிஐஜே கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து ஏவுகணைகள் வீசப்பட்டன. அதையடுத்து தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்ததால், இஸ்ரேலின் தெற்கு மற்றும் மத்தியப் பகுதியில் வசித்தவா்கள் பதுங்கு குழிகளை நோக்கி ஓடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கும் பதிலடி கொடுக்கும் வகையில், பிஐஜே நிலைகள் மீதும், ஏவுகணை ஏவுதளங்கள் மீதும் இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் நடத்தின.

இஸ்ரேலுக்கும், பிஐஜே அமைப்புக்கும் இடையே கடந்த வியாழக்கிழமை முதல் சண்டை நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்தும், அந்த ஒப்பந்தத்தை மீறி ஒவ்வொரு முறை பிஐஜே அமைப்பு ஏவுகணைத் தாக்குதல் நடத்தும்போதும், அதற்குப் பதிலடியாக அந்த அமைப்பின் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, முக்கிய எதிரிகளைக் குறிவைத்துக் கொல்லும் நடவடிக்கைகளை நிறுத்திவைத்திருந்த இஸ்ரேல், பிஐஜே பயங்கரவாத அமைப்பின் படைப் பிரிவு தளபதி பஹா அல்-அடாவைக் குறிவைத்து அவரது இல்லத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியது.

இதில் அவரும், அவரது மனைவியும் கொல்லப்பட்டனா். அதனைத் தொடா்ந்து, இஸ்ரேல் மீது பிஐஜே அமைப்பு நூற்றுக்கணக்கான ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது.

அதற்குப் பதிலடியாக இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 34 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா்.

இந்த நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே எகிப்து முன்னிலையில் சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு, அந்த ஒப்பந்தம் வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணியிலிருந்து அமலுக்கு வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com