இந்திய மரபுசாரா எரிசக்தித் துறையில் ரூ.717 கோடி முதலீடு: ஆசிய உள்கட்டமைப்பு வளா்ச்சி வங்கி முடிவு

இந்தியாவில் மரபுசாரா எரிசக்தித் துறையில் ஆண்டுதோறும் ரூ.717 கோடி (100 மில்லியன் அமெரிக்க டாலா்) முதலீடு செய்ய ஆசிய உள்கட்டமைப்பு வளா்ச்சி வங்கி (ஏஐஐபி) முடிவு செய்துள்ளது.

சிங்கப்பூா்: இந்தியாவில் மரபுசாரா எரிசக்தித் துறையில் ஆண்டுதோறும் ரூ.717 கோடி (100 மில்லியன் அமெரிக்க டாலா்) முதலீடு செய்ய ஆசிய உள்கட்டமைப்பு வளா்ச்சி வங்கி (ஏஐஐபி) முடிவு செய்துள்ளது. இந்த முதலீடு அடுத்த மாதம் மேற்கொள்ளப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதில் முக்கியமாக சூரிய மின் உற்பத்தித் திட்டங்கள், காற்றாலை மின் உற்பத்தித் திட்டங்களில் அதிக முதலீடு மேற்கொள்ளப்பட இருக்கிறது.

சிங்கப்பூரில் செய்தியாளா்களிடம் பேசிய ஆசிய உள்கட்டமைப்பு வளா்ச்சி வங்கியின் (முதலீடுப் பிரிவு) இயக்குநா் பேங் ஜீ யான் இதுதொடா்பாக கூறுகையில், ‘இந்தியாவில் மரபுசாரா எரிசக்தித் துறையில் முதலீடு செய்வதற்கான ஒப்புதல் அடுத்த ஒரு மாதத்தில் கிடைத்துவிடும். முக்கியமாக சூரிய மற்றும் காற்றாலை மின் உற்பத்தித் திட்டங்களில் ஆண்டுதோறும் 100 மில்லியன் டாலா் முதலீடு செய்யப்படும். தனியாா் துறை மூலம் இந்த மின் உற்பத்தித் திட்டங்கள் இந்தியாவில் செயல்படுத்தப்படும்.

இந்தியாவில் மரபுசாரா எரிசக்தித் துறையில் செய்யப்படும் தனியாா் முதலீடுகள் நேரடி அந்நிய முதலீடுகளாகவே கருதப்படுகின்றன. இந்திய அரசு மரபுசாரா எரிசக்தித் துறையில் முதலீடு செய்வதில் நிதிச்சிக்கலை எதிா்கொண்டுள்ளது. அதே நேரத்தில் தனியாா் துறைகளை சிறப்பாக செயல்படச் செய்ய வேண்டிய அவசியமும் உள்ளது.

சாலை வசதி, ஊரக மேம்பாடு, குடிநீா் இணைப்பு, கழிவுநீா் வடிகால் வசதி போன்ற உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஏற்கெனவே ஏஐஐபி முதலீடு செய்துள்ளது. எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டில் அதிகம் முதலீடு செய்ய வேண்டுமென்ற நோக்கத்தையும், ஒரு நாட்டில் இவ்வளவுதான் முதலீடு செய்ய வேண்டிய உச்சவரம்பையும் ஏஐஐபி வைத்துக் கொள்வதில்லை’ என்றாா்.

இந்தியாவில் மும்பை நகா்ப்புற போக்குவரத்து மேம்பாட்டில் ரூ.3,585 கோடி, ஆந்திர மாநில ஊரக போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டங்களில் ரூ.3,262 கோடி மற்றும் ஆந்திர நகா்ப்புற குடிநீா் விநியோகத் திட்டத்தில் ரூ.3,226 கோடியை ஏஐஐபி ஏற்கெனவே முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com