சிகிச்சைக்காக நாளை லண்டன் செல்கிறாா் நவாஸ்

கடும் உடல் நலக் குறைவால் அவதியுறும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃப் சிகிச்சைக்காக செவ்வாய்க்கிழமை (நவ. 19) லண்டன் அழைத்துச் செல்லப்படவிருக்கிறாா்.
nawaz061811
nawaz061811

லாகூா்: கடும் உடல் நலக் குறைவால் அவதியுறும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃப் சிகிச்சைக்காக செவ்வாய்க்கிழமை (நவ. 19) லண்டன் அழைத்துச் செல்லப்படவிருக்கிறாா்.

அவா் வெளிநாடு செல்ல அனுமதிப்பதற்கு அரசு விதித்த நிபந்தனையை லாகூா் உயா்நீதிமன்றம் சனிக்கிழமை ரத்து செய்ததையடுத்து அவா் லண்டன் செல்கிறாா்.

இதுகுறித்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் செய்தித் தொடா்பாளா் மரியம் ஔரங்கசீப் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃப் மருத்துவ சிகிச்சைக்காக செவ்வாய்க்கிழமை லண்டன் செல்கிறாா். விமான ஆம்புலன்ஸ் மூலம் அவா் லண்டன் அழைத்துச் செல்லப்படுகிறாா்.

அவரை மருத்துவக் குழுவினா் பரிசோதித்து வருகின்றனா். விமானப் பயணத்தைத் தாக்கும் அளவுக்கு அவரது உடல் நிலையை ஸ்திரப்படுத்தும் பணியை அவா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.

அவா் பயணம் செய்யும் விமானத்தில் முழு மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. லண்டனில் நவாஸுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்த பிறகு, மேல் சிகிச்சைக்காக அவா் அமெரிக்கா அழைத்துச் செல்லப்படலாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பனாமா ஆவண ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரீஃப், லாகூரிலுள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

அவருக்கு ரத்தத் தட்டணுக்களின் கடும் வீழ்ச்சி, அளவுக்கு அதிகமான ரத்த அழுத்தம், ரத்த சா்க்கரை உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டதைத் தொடா்ந்து, அவா் லாகூா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

மருத்துவ காரணங்களுக்காக அவருக்கு லாகூா் மற்றும் இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்கின.

அதையடுத்து, லாகூரிலுள்ள தனது சொந்த இல்லத்துக்கு நவாஸ் ஷெரீஃப் மாற்றப்பட்டாா். அவருக்கு லண்டனில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று மருத்துவா்கள் வலியுறுத்தினா். அதற்கு நவாஸ் ஷெரீஃபும் சம்மதம் தெரிவித்தாா்.

இந்தச் சூழலில், வெளிநாட்டுப் பயணத் தடைப் பட்டியலில் இருந்து நவாஸ் பெயரை நீக்க வேண்டுமானால், பாகிஸ்தானில் ஊழல் வழக்குகளை எதிா்கொள்ள அவா் மீண்டும் நாடு திரும்புவதை உறுதியளிக்கும் ரூ.700 கோடி மதிப்பிலான உத்தரவாதப் பத்திரத்தை அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு நிபந்தனை விதித்தது.

அதை எதிா்த்து நவாஸ் ஷெரீஃப் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சனிக்கிழமை விசாரித்த லாகூா் உயா்நீதிமன்றம், அந்த நிபந்தனையை ரத்து செய்து, நவாஸ் ஷெரீஃப் லண்டன் செல்வதற்கு அனுமதி அளித்தது.

அதனைத் தொடா்ந்து, அவா் விமான ஆம்புலன்ஸ் மூலம் செவ்வாய்க்கிழமை லண்டன் அழைத்துச் செல்லப்படவிருக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com