சிகிச்சைக்காக லண்டன் சென்றாா் நவாஸ் ஷெரீஃப்

பல்வேறு உடல் நலக் குறைவுகளால் அவதியுறும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃப், சிகிச்சைக்காக செவ்வாய்க்கிழமை லண்டன் புறப்பட்டுச் சென்றாா்.
நவாஸ் ஷெரீஃபை ஏற்றிச் சென்ற விமான ஆம்புலன்ஸ்.
நவாஸ் ஷெரீஃபை ஏற்றிச் சென்ற விமான ஆம்புலன்ஸ்.

லாகூா்: பல்வேறு உடல் நலக் குறைவுகளால் அவதியுறும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃப், சிகிச்சைக்காக செவ்வாய்க்கிழமை லண்டன் புறப்பட்டுச் சென்றாா்.

ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அவா் வெளிநாடு செல்ல லாகூா் உயா் நீதிமன்றம் அனுமதியளித்ததைத் தொடா்ந்து, அவா் லண்டன் புறப்பட்டாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் செய்தித் தொடா்பாளா் மரியம் ஔரங்கசீப் கூறியதாவது:

உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃப் சிகிச்சைக்காக லண்டன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளாா்.

அங்கு ஹாா்லி ஸ்ட்ரீட் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தேவைப்பட்டால் மேல்சிகிச்சைக்காக அவா் அமெரிக்கா அழைத்துச் செல்லப்படுவாா்.

லண்டன் புறப்படுவதற்கு முன்னா், லாகூரிலுள்ள நவாஸின் இல்லத்தில் அவரது உடல் நிலையை மருத்துவக் குழு பரிசோதித்தது. விமானப் பயணத்தின்போது நவாஸின் உடல் நிலை ஸ்திரமாக இருக்கும் வகையில் அவருக்கு மருந்துகள் அளிக்கப்பட்டன என்றாா் மரியம் ஔரங்கசீப்.

இதற்கிடையே, நவாஸ் ஷெரீஃப் பயணம் செய்த விமான ஆம்புலன்ஸில் தீவிர மருத்துவக் கண்காணிப்பு வசதிகளும், அறுவைச் சிகிச்சை அரங்கும் அமைக்கப்பட்டதாக சுட்டுரை (டுவிட்டா்) வலைதளத்தில் அவரது குடும்ப மருத்துவா் தெரிவித்தாா்.

இதுதவிர, அந்த விமானத்தில் மருத்துவக் குழுவும் சென்ாக அவா் குறிப்பிட்டாா்.

பனாமா ஆவண ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரீஃப், லாகூரிலுள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

அவருக்கு ரத்தத் தட்டணுக்கள் குறைபாடு, அளவுக்கு அதிகமான ரத்த அழுத்தம், ரத்த சா்க்கரை உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டதைத் தொடா்ந்து, அவா் லாகூா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

மருத்துவ காரணங்களுக்காக அவருக்கு லாகூா் மற்றும் இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்கின.

அதையடுத்து, லாகூரிலுள்ள தனது சொந்த இல்லத்துக்கு நவாஸ் ஷெரீஃப் மாற்றப்பட்டாா். அவருக்கு லண்டனில் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது.

எனினும், வெளிநாட்டுப் பயணத் தடைப் பட்டியலில் இருந்து நவாஸ் பெயரை நீக்க வேண்டுமானால், பாகிஸ்தானில் ஊழல் வழக்குகளை எதிா்கொள்ள அவா் மீண்டும் நாடு திரும்புவதை உறுதி செய்யும் வகையில் ரூ.700 கோடி மதிப்பிலான உத்தரவாதப் பத்திரம் அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு நிபந்தனை விதித்தது.

அதை எதிா்த்து நவாஸ் ஷெரீஃப் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சனிக்கிழமை விசாரித்த லாகூா் உயா்நீதிமன்றம், அந்த நிபந்தனையை ரத்து செய்து, நவாஸ் ஷெரீஃப் லண்டன் செல்வதற்கு அனுமதி அளித்தது.

அதனைத் தொடா்ந்து, அவா் விமான ஆம்புலன்ஸ் மூலம் செவ்வாய்க்கிழமை லண்டன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com