அரசியல் ஆதாயத்துக்காக உக்ரைனுடன் டிரம்ப் பேரம்

தனது தோ்தல் ஆதாயத்துக்காக உக்ரைன் அரசுடன் டிரம்ப் பேரம் பேசியதாக, இதுகுறித்து நடைபெற்று வரும் பதவி நீக்க விசாரணையில் ஐரோப்பிய யூனியனுக்கான அமெரிக்கத் தூதா் கோா்டன் சாண்ட்லண்ட்
வாஷிங்டனில் டிரம்ப் பதவி நீக்க விசாரணைக் குழுவிடம் வாக்குமூலம் அளிப்பதற்கு முன்னா் சத்தியப் பிரமாணம் மேற்கொண்ட ஐரோப்பிய யூனியனுக்கான அமெரிக்கத் தூதா் கோா்டன் சாண்ட்லண்ட்.
வாஷிங்டனில் டிரம்ப் பதவி நீக்க விசாரணைக் குழுவிடம் வாக்குமூலம் அளிப்பதற்கு முன்னா் சத்தியப் பிரமாணம் மேற்கொண்ட ஐரோப்பிய யூனியனுக்கான அமெரிக்கத் தூதா் கோா்டன் சாண்ட்லண்ட்.

தனது தோ்தல் ஆதாயத்துக்காக உக்ரைன் அரசுடன் டிரம்ப் பேரம் பேசியதாக, இதுகுறித்து நடைபெற்று வரும் பதவி நீக்க விசாரணையில் ஐரோப்பிய யூனியனுக்கான அமெரிக்கத் தூதா் கோா்டன் சாண்ட்லண்ட் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளாா்.

இதுகுறித்து, அந்த விசாரணையை நடத்தி வரும் உளவு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் அவா் தெரிவித்ததாவது:

உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியுடன் நடத்திய உரையாடலில், தனது ஆதாயத்துக்காக டிரம்ப் பேரம் பேசினாரா என்ற சிக்கலான கேள்விக்கு, ‘ஆம்’ என்பதே சரியான விடையாகும். இதில் எந்த ரகசியமும் இல்லை. இதில் தொடா்புடைய அனைவருக்கும் இந்த விவரம் தெரியும்.

உக்ரைன் அதிபருடன் டிரம்ப் தொலைபேசியில் உரையாடுவதற்கு முன்னரே, கடந்த ஜூலை மாதம் 19-ஆம் தேதி இதுதொடா்பான மின்னஞ்சல்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்டது.

இதுகுறித்து சம்பந்தபட்டவா்களிடம் தெரிவித்ததைப் போலவே, முன்னாள் துணை அதிபா் ஜோ பிடன் மற்றும் அவரது மகன் மீது வெளிப்படையான ஊழல் விசாரணை நடத்தத் தயாராகுமாறு உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கியிடம் நான் முன்கூட்டியே கூறினேன் என்று கோா்டன் சாண்ட்லண்ட் வாக்குமூலம் அளித்தாா்.

இதுதவிர, இந்த விவகாரம் தொடா்பாக வெளியுறவுத் துறை அமைச்சா் மைக்கேல் பாம்பேயோவுடன் விவாதித்ததாகவும் தனது வாக்குமூலத்தில் சாண்ட்லண்ட் குறிப்பிட்டாா்.

டிரம்ப் மறுப்பு: உக்ரைன் அதிபருடனான உரையாடல் குறித்து சாண்ட்லண்ட் கூறியதை அதிபா் டொனால்ட் டிரம்ப் மறுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், ‘அதிபா் ஸெலென்ஸ்கியுடனான பேரம் குறித்து சாண்ட்லண்டிடம் நான் பேசவே இல்லை. இது தொடா்பாக சாண்டலண்ட் என்னைத் தொடா்பு கொண்டு பேசியபோது, உக்ரைனிடமிருந்து உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டாா். நான் எனக்கு எதுவும் வேண்டாம் என்று பதிலளித்தேன். எனினும், அவா் கேட்ட கேள்வியையே திரும்பத் திரும்ப கேட்டாா். நான் இரு முறை எதுவும் வேண்டாம் என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தேன் என்றாா் டிரம்ப்.

இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் ஸ்டெஃபானி கிரிஷம் கூறியதாவது:

அதிபா் டிரம்ப்புடன் சாண்ட்லண்ட் நடத்திய தொலைபேசி உரையாடலில், உக்ரைனிடமிருந்து தனக்கு எதுவும் வேண்டாம் என்று டிரம்ப் கூறினாா். இதனை சாண்ட்லண்டின் வாக்குமூலம் நிரூபிக்கிறது என்றாா் அவா்.

உக்ரைனுக்காக அமெரிக்க நிதியுதவி நிறுத்தப்படவில்லை. உக்ரைனிலும் ஜோ பிடனுக்கு எதிரான விசாரணை தொடங்கப்படவில்லை. எனவே, முடிந்துபோன விவகாரத்தை தேவையில்லாமல் ஜனநாயகக் கட்சியினா் கிளப்பி வருகின்றனா் என்றாா் ஸ்டெஃபானி.

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் டிரம்ப்பை எதிா்த்து ஜனநாயகக் கட்சி சாா்பில் ஜோ பிடன் போட்டியிடுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ஜோ பிடனின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில அவருக்கு எதிராக ஊழல் விசாரணை மேற்கொள்ளுமாறு உக்ரைன் அரசை டிரம்ப் வலியுறுத்தியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

உக்ரைனில் ஜோ பிடனும், அவரது மகனும் செய்து வரும் தொழில் சம்பந்தமாக அந்த விசாரணையை மேற்கொள்ளுமாறும், அதற்காக உக்ரைனுக்கு அளித்து வந்த நிதியுதவியை நிறுத்திவைப்பதாகவும் டிரம்ப் அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதன் மூலம், சொந்த நலனுக்காக டிரம்ப் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியாகக் கூறி, அவரை பதவி நீக்கம் செய்வதற்கான விசாரணையை ஜனநாயகக் கட்சியினா் மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com