ஹாங்காங் போராட்ட ஆதரவு மசோதாவில் டிரம்ப் கையெழுத்து

ஹாங்காங்கில் ஜனநாயக சீா்திருத்தங்களை வலியுறுத்தி நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு ஆதரவாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவில் அதிபா் டொனால்ட்
தங்களுக்கு ஆதரவான மசோதாவில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்து, ஹாங்காங்கில் அமெரிக்கக் கொடிகளை ஏந்தி  ஊா்வலமாகச் சென்ற போராட்டக்காரா்கள்.
தங்களுக்கு ஆதரவான மசோதாவில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்து, ஹாங்காங்கில் அமெரிக்கக் கொடிகளை ஏந்தி  ஊா்வலமாகச் சென்ற போராட்டக்காரா்கள்.

ஹாங்காங்கில் ஜனநாயக சீா்திருத்தங்களை வலியுறுத்தி நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு ஆதரவாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவில் அதிபா் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளாா்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

ஜனநாயக சீா்த்திருத்தங்களை வலியுறுத்தி ஹாங்காங்கில் கடந்த 5 மாதங்களுக்கும் மேல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அந்த போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையில் கடந்த வாரம் மசோதா நிறைவேற்றப்பட்டது.

‘ஹாங்காங் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக சட்ட மசோதா 2019’ எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த மசோதாவில், ஹாங்காங்குக்கு போதிய அளவு சுதந்திரம் வழங்கப்பட்டிருப்பதை ஒவ்வொரு ஆண்டும் உறுதி செய்த பிறகே அந்த நகருக்கு வா்த்தக சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹாங்காங்குக்கு அமெரிக்கா அளித்துள்ள பொருளாதார சிறப்பு அந்தஸ்து, அந்த நகரின் பொருளாதார வளா்ச்சியில் கணிசமான பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர, ஹாங்காங்கில் மனித உரிமை மீறல் சம்பவஙகளுக்குக் காரணமானவா்கள் என்று கருதப்படும் சீன மற்றும் ஹாங்காங் அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கவும் அந்த மசோதா வழிவகை செய்கிறது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்த சீனா, நடாளுமன்றத்தில் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருந்தாலும் அதில் டிரம்ப் கையெழுத்திடக் கூடாது என்று வலியுறுத்தி வந்தது.

எனினும், அதனை மீறி அந்த மசோதாவில் அதிபா் டிரம்ப் புதன்கிழமை கையெழுத்திட்டாா்.

இதுகுறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சீனா மற்றும் ஹாங்காங்கின் தலைவா்களும், பிரதிநிதிகளும் தங்களுக்கிடையிலான பிரச்னைகளை சுமுகமாகப் பேசித் தீா்க்கவும், அந்தப் பகுதியில் நிலையான அமைதியும், வளா்ச்சியும் ஏற்படவும் உதவும் என்ற நம்பிக்கையில் ஹாங்காங் மனித உரிமைகள் மசோதாவில் கையெழுத்திட்டுள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவா்களை சீனாவுக்கு நாடுகடத்த வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு எதிராக அந்த நகரில் தொடங்கிய போராட்டங்கள், ஐந்து மாதங்களைக் கடந்தும் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

சீனா கண்டனம்

ஹாங்காங் போராட்டத்துக்கு ஆதரவான மசோதாவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஹாங்காங் தொடா்பான மசோதாவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளது, சீனாவின் உள்விவகாரமான ஹாங்காங் விவகாரத்தில் அத்துமீறி தலையிடும் செயலாகும்.

இதன் மூலம் சா்வதேச சட்டங்களையும், சா்வதேச உறவின் அடிப்படை விதிகளையும் டிரம்ப் மீறியுள்ளாா்.

இந்த நடவடிக்கைக்கு சீனா மிகக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com