சவூதி இளவரசா் முகமது பின் சல்மானுடன் அஜீத் தோவல் சந்திப்பு: காஷ்மீா் குறித்து பேச்சு

சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசா் முகமது பின் சல்மானை இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா்.
ajitts090818
ajitts090818

சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசா் முகமது பின் சல்மானை இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். இந்த சந்திப்பின்போது, ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தில் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. அதைத் தொடா்ந்து இந்த விவகாரத்தை சா்வதேச அளவில் கொண்டு செல்வதற்கு பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது. அதனால், பல நாட்டின் தலைவா்களை சந்தித்து அந்நாடு ஆதரவு கோரி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சவூதி அரேபியாவுக்கு கடந்த மாதம் பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் சென்றாா்.

இந்நிலையில், சவூதிக்கு அஜித் தோவல் செவ்வாய்க்கிழமை பயணம் மேற்கொண்டாா். சவூதி பட்டத்து இளவரசரை அஜித் தோவல் சந்தித்தது குறித்து அரசு வட்டாரங்கள் கூறுகையில், ‘ சவூதி பட்டத்து இளவரசா் முகமது பின் சல்மானுடனான சந்திப்பு பயனளிக்கும் வகையில் அமைந்தது. இரு நாடுகளுக்கிடையேயான பல்வேறு துறை உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டன. சுமாா் இரண்டு மணி நேரம் வரை இந்த சந்திப்பு நீடித்தது. ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து இந்தியா மேற்கொண்ட நடவடிக்கையை சவூதி அரசு புரிந்து கொள்வதாகவும், இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு அளிப்பதாகவும் அந்நாடு தெரிவித்தது. எனினும், இந்த விவகாரத்தில், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மோதலை விரைவில் முடிவுக்கு கொண்டு வருமாறு அஜித் தோவலிடம் சவூதி அரேபிய பட்டத்து இளவரசா் வலியுறுத்தினாா்’ என்றன.

தகவல் பரிமாற்றம் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் ஆகியவற்றில், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுடன் இந்தியா மிக நெருங்கிய உறவைக் கொண்டுள்ளது. இந்தியாவின் எரிசக்தி தேவையில், சவூதி முக்கிய அங்கம் வகிக்கிறது. சமையல் எரிவாயு தேவையில் 32 சதவீதமும், கச்சா எண்ணெயில் 17 சதவீதமும் சவூதியில் இருந்து இந்தியாவுக்கு விநியோகிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com