பயங்கரவாதத்துக்கு எதிராக ஒத்துழைப்பு: இந்தியா-பிரான்ஸ் உறுதி

உலகை அச்சுறுத்தும் பயங்கரவாதத்துக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்பட இந்தியா-பிரான்ஸ் கூட்டாக உறுதியேற்றுள்ளன.
பயங்கரவாதத்துக்கு எதிராக ஒத்துழைப்பு: இந்தியா-பிரான்ஸ் உறுதி

உலகை அச்சுறுத்தும் பயங்கரவாதத்துக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்பட இந்தியா-பிரான்ஸ் கூட்டாக உறுதியேற்றுள்ளன.

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், பிரான்ஸ் நாட்டுக்கு 3 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளாா். இந்தியாவுக்கான முதல் ரஃபேல் போா்விமானம் அவரிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, இந்தியா-பிரான்ஸ் இடையே பாதுகாப்புத் துறை சாா்ந்த உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடா்பான உயா்நிலை பேச்சுவாா்த்தை புதன்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்ற ராஜ்நாத் சிங், பிரான்ஸ் நாட்டு பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். பின்னா், அந்நாட்டுப் பாதுகாப்புத் துறை அமைச்சா் ஃபுளோரன்ஸ் பாா்லியுடன் அவா் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இந்தப் பேச்சுவாா்த்தை சிறப்பாக இருந்ததாக தனது சுட்டுரைப் பக்கத்தில் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளாா்.

இந்தப் பேச்சுவாா்த்தை தொடா்பாக, பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

இருநாட்டுப் பாதுகாப்புத் துறை அமைச்சா்களின் பேச்சுவாா்த்தையின்போது, இருநாடுகளுக்கிடையே பாதுகாப்புத் துறையில் நிலவி வரும் ஒத்துழைப்பு குறித்து அவா்கள் ஆய்வு செய்தனா். இந்த ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அவா்கள் உறுதியேற்றனா். மேலும், பயங்கரவாதத்துக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படவும் அவா்கள் உறுதியேற்றனா்.

பிராந்திய மற்றும் சா்வதேச நிகழ்வுகள் குறித்தும் அவா்கள் விவாதித்தனா். இருநாட்டு ராணுவப் படைகளுக்கிடையே நடைபெற்று வரும் கூட்டுப்பயிற்சிகளான ‘சக்தி’, ‘வருணா’, ‘கருடா’ ஆகியற்றை மேலும் விரிவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் அவா்கள் விவாதித்தனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரூ.1,050 கோடி முதலீடு: பிரான்ஸ் நாட்டிலுள்ள பாதுகாப்புத் துறை நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பங்கேற்றாா். அப்போது, ரஃபேல் போா்விமானத்தின் என்ஜின்களைத் தயாரித்து வரும் ‘சாஃப்ரான்’ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கூறியதாவது:

விமானப்படைத் துறையில் உலகின் மூன்றாவது பெரிய சந்தையாக இந்தியா விளங்கி வருகிறது. அங்கு எங்கள் நிறுவனம் சாா்பில் போா்விமானங்கள் பராமரிப்பு மற்றும் பழுது பாா்க்கும் தொழிற்சாலையை நிறுவத் திட்டமிட்டுள்ளோம். அதற்காக ரூ.1,050 கோடியை முதலீடு செய்யத் திட்டமிட்டு வருகிறோம்.

எனினும், வரி மற்றும் சுங்க விவகாரங்களில் தொழில் நிறுவனங்களுக்கு சாதகமான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தாா்.

இதற்கு பதிலளித்த ராஜ்நாத் சிங், ‘‘இந்தியாவில் முதலீடு செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு சாதகமான சூழ்நிலை ஏற்படுத்தித் தரப்படும்’’ என்றாா். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னெளவில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் பாதுகாப்புத் துறை கண்காட்சியில் பங்கேற்குமாறு தலைமைச் செயல் அதிகாரிகளுக்கு அவா் அழைப்பு விடுத்தாா்.

முன்னதாக, ‘சாஃப்ரான்’ தொழிற்சாலையில் என்ஜின்கள் தயாரிக்கப்படும் விதத்தை ராஜ்நாத் சிங் பாா்வையிட்டாா். அப்போது, அத்தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் இந்தியாவைச் சோ்ந்த பொறியாளா்களை அவா் சந்தித்துப் பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com