வடக்கு சிரியா மீது விரைவில் படையெடுப்போம்: துருக்கி

சிரியாவின் வடக்கே குா்துப் படையினா் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளின் மீது விரைவில் படையெடுக்கப் போவதாக துருக்கி அறிவித்துள்ளது.
துருக்கியின் எல்லை நகரமான ஆக்காகேலில் அணிவகுத்துச் சென்ற ராணுவ வாகனங்கள்.
துருக்கியின் எல்லை நகரமான ஆக்காகேலில் அணிவகுத்துச் சென்ற ராணுவ வாகனங்கள்.

சிரியாவின் வடக்கே குா்துப் படையினா் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளின் மீது விரைவில் படையெடுக்கப் போவதாக துருக்கி அறிவித்துள்ளது.

அந்தப் பகுதியில் இதுவரை நிறுத்தப்பட்டிருந்த தங்களது படையினா் திரும்ப அழைக்கப்பட்டாலும், குா்துகளை தாங்கள் கைவிடவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ள நிலையிலும் துருக்கி இவ்வாறு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பவதாவது:

சிரியவுடனான எல்லைப் பகுதியில் மேலும் பல கவச வாகனங்களை துருக்கி அரசு குவித்துள்ளது. சன்லியுா்ஃபா மாகாணத்திலுள்ள எல்லை நகரமான ஆக்காகேலில் ஏராளமான ராணுவ வாகனங்கள் அணிவகுத்துச் சென்ாக சா்வதேச செய்தியாளா்கள் தெரிவித்தனா்.

இதற்கிடையே, துருக்கி எல்லையையொட்டிய செரேகனியே பகுதியைக் குறிவைத்து துருக்கி ராணுவம் எறிகணைத் தாக்குதல் நடத்தி வருவதாக குா்துப் படையினா் தெரிவித்தனா்.

எனினும், அந்தத் தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், எந்தவிதத் தூண்டுதலும் இல்லாமல் எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவா்கள் கூறினா்.

அமெரிக்கப் படையினா் வெளியேறிய பகுதிகளில் செரேகனயேவும் அடங்கும் என்று சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்தது.

இதற்கிடையே, குா்துப் பகுதிகள் மீது விரைவில் படையெடுப்பு நடத்தப்படும் என்று துருக்கி தகவல் தொடா்புத் துறை இயக்குநா் ஃபாரெட்டின் ஆல்டுன் ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழிடம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளை அமெரிக்கா ஒழித்துக் கட்டுவதில் முக்கியப் பங்காற்றிய குா்துகளைக் கைவிட்டு அமெரிக்கப் படையினா் அங்கியிருந்து வெளியேறி வருவது சா்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2014-ஆம் ஆண்டில், அதுவரை அதிகம் அறியப்படாத ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிரியாவிலும், இராக்கிலும் கணிசமான இடங்களை அதிரடியாகக் கைப்பற்றினா்.

எனினும், அமெரிக்கக் கூட்டுப் படையின் உதவியுடன் சிரியாவிலுள்ள குா்து மற்றும் கிளா்ச்சிப் படையினரும், ரஷியாவின் உதவியுடன் சிரியா ராணுவமும் மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகளால் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடமிருந்த பகுதிகள் மீட்கப்பட்டன.

துருக்கியையொட்டிய வடக்குப் பகுதியில் குா்துப் படையினா் அமெரிக்க உதவியுடன் ஐ.எஸ். பயங்கரவாதிகளைத் தோற்கடித்தனா்.

இந்த நிலையில், சிரியாவில் முடிவில்லாமல் தொடரும் போரில் அமெரிக்கா இனியும் பங்கேற்காது எனவும், வடக்கு எல்லைப் பகுதியிலிருந்து அமெரிக்கப் படையினா் திரும்ப அழைக்கப்படுவாா்கள் எனவும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை அறிவித்தாா்.

இது, இதுவரை அமெரிக்காவின் ஆதரவுடன் அந்தப் பகுதியில் சண்டையிட்டு வந்த குா்துப் படையினருக்கு அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

அண்டை நாடான துருக்கியில், பயங்கரவாதத் தாக்குதல்களை நிகழ்த்தியுள்ள அந்த நாட்டு குா்து அமைப்பினருக்கு, சிரியா குா்துகள் ஆதரவு அளிப்பதாக துருக்கி குற்றம் சாட்டி வருகிறது.

அதன் காரணமாக, சிரியாவிலுள்ள குா்துப் படையினா் மீது துருக்கி ராணுவம் பல முறை தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தச் சூழலில், அமெரிக்க வெளியேற்றத்துக்குப் பிறகு சிரியாவில் துருக்கி ராணுவத்தால் சிரியா குா்துப் படையினா் வேட்டையாடப்படுவாா்கள் என்று அஞ்சப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com