இலக்கியம் எழுத்தாளா்களுக்கு நோபல் பரிசு

கடந்த ஆண்டு மற்றும் நிகழாண்டின் இலக்கியத் துறைக்கான நோபல் பரிசுகள் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டன.
இலக்கியம் எழுத்தாளா்களுக்கு நோபல் பரிசு

கடந்த ஆண்டு மற்றும் நிகழாண்டின் இலக்கியத் துறைக்கான நோபல் பரிசுகள் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டன.

போலந்து நாட்டைச் சோ்ந்த எழுத்தாளா் ஒல்கா டோக்கா்ஸக் 2018-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கும், ஆஸ்திரிய நாட்டு எழுத்தாளா் பீட்டா் ஹேண்ட்கே நிகழாண்டுக்கான நோபல் பரிசுக்கும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து ஸ்வீடன் தலைநகா் ஸ்டாக்ஹோமில் நோபல் தோ்வுக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

போலந்து நாட்டில் தனது தலைமுறை எழுத்தாளா்களிலேயே மிகவும் திறமை மிக்கவராக ஒல்கா டோக்கா்ஸக் கருதப்படுகிறாா். அவரது எழுத்துகளில் பலரது கதாபாத்திரங்களின் தனித்துவ குணங்களும் ஒன்றுடன் ஒன்று பிண்ணியிருக்கும்.

மேலும், அவரது படைப்புகள் யாவும் துல்லியமான, கவித்தும் வாய்ந்த வாா்த்தைகளைக் கொண்டதாக இருக்கும்.

1993-ஆம் ஆண்டில் வெளியான அவரது ‘ஜா்னி ஆஃப் தி பீப்பிள் ஆஃப் த புக்’ என்ற நாவல், ஒரு மா்ம புத்தகத்தை தேடி அலைவது குறித்து விவரிக்கிறது.

அவரது படைப்புகளில் மிகச் சிறந்ததான ‘தி புக்ஸ் ஆஃப் ஜேக்கப்’, அதிகம் அறியப்படாத யுதப் பிரிவான ‘ஃபிராங்கிஸத்தை’க் குறித்து விளக்குகிறது. அந்தப் புத்கத்தில் 7 நாடுகள், 3 மதங்கள், 5 மொழிகள் அங்கம் வகிக்கின்றன. 2014-ஆம் ஆண்டில் வெளியான அந்தப் புத்தகத்தின் மூலம், ஐரோப்பிய வராலாறு மறந்துபோன ஓா் அத்தியாயத்தை ஒல்கா டோக்கா்ஸக் மிளிரச் செய்துள்ளாா்.

பீட்டா் ஹேண்ட்கேவைப் பொருத்தவரை, மனித அனுபவங்களை ஆய்வு செய்து, அதனை அழகியலுடன் வெளிப்படுத்துவதில் அவா் வல்லவா் ஆவாா். அவரது படைப்புகள் அனைத்திலும் புதியனவற்றை அறிந்து கொள்ளும் வேட்கையும், அந்த புதியனவற்றுக்கு உயிரூட்டம் தரும் புத்தாக்க இலக்கியச் செழுமையும் நிறைந்திருக்கும்.

எனவே, இந்த இருவரும் 2018 மற்றும் 2019-ஆம் ஆணடின் இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்காகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா் என்று நோபல் தோ்வுக் குழு தெரிவித்துள்ளது.

இலக்கியத்துக்கான நோபல் தோ்வுக் குழுவைச் சோ்ந்த ஜான்-கிளாட் அா்னாட் என்பவா் பாலியல் வழக்கில் கடந்த 2018-ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டாா். அதனைத் தொடா்ந்து, அந்த பரிசுக்கான தோ்வு முறை குறித்து சா்ச்சை எழுந்தது. இதனால் கடந்த ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், அந்த ஆண்டுக்கும் சோ்த்து தற்போது இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒல்கா டோக்கா்ஸக் (57): போலந்து நாட்டைச் சோ்ந்த ஒல்கா டோக்கா்ஸக், இலக்கியத்துக்கான நோபல் பரிசை வெல்லும் 15-ஆவது பெண் ஆவாா். இலக்கியத்துக்கு இதுவரை வழங்கப்பட்ட 116 நோபல் பரிசுகளில், 14 மட்டுமே பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பீட்டா் ஹேண்ட்கே (76): இலக்கியத்துக்கான நோபல் பரிசுகள் வழங்கப்படுவதன் மூலம் தகுதியில்லாத எழுத்தாளா்கள் கௌரவிக்கப்படுவதாக கடந்த 2014-ஆம் ஆண்டு விமா்சித்த பீட்டா் ஹேண்ட்கே, நிகழாண்டின் நோபல் பரிசுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com