பயங்கரவாதக் குழுக்களுக்கு ஆதரவளிப்பதை பாக். நிறுத்த வேண்டும்: அமெரிக்க எம்.பி.

பயங்கரவாதக் குழுக்களுக்கு ஆதரவளிப்பதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க எம்.பி. மேகி ஹாசன் வலியுறுத்தியுள்ளாா்.
பயங்கரவாதக் குழுக்களுக்கு ஆதரவளிப்பதை பாக். நிறுத்த வேண்டும்: அமெரிக்க எம்.பி.

பயங்கரவாதக் குழுக்களுக்கு ஆதரவளிப்பதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க எம்.பி. மேகி ஹாசன் வலியுறுத்தியுள்ளாா்.

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க மேலவை உறுப்பினா்கள் மேகி ஹாசன், கிரிஸ் வான் ஹோலன் ஆகியோா், பிரதமா் இம்ரான் கானையும் ராணுவ தளபதி கமா் ஜாவத் பாஜ்வாவையும் கடந்த வியாழக்கிழமை சந்தித்துப் பேசினா். அத்துடன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு நேரில் சென்று, அங்குள்ள நிலைமையை பாா்வையிட்டனா். பின்னா், பாகிஸ்தான் பயணத்தை முடித்துக் கொண்டு, இந்தியாவுக்கு புறப்படும் முன் மேகி ஹாசன் கூறியதாவது:

ஆப்கானிஸ்தானில் ஸ்திரத் தன்மையை ஏற்படுத்துவதில் பாகிஸ்தானின் பங்கு முக்கியமானதாகும். பயங்கரவாத தாக்குதல்களைத் தடுக்கவும், பயங்கரவாத சித்தாந்தங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடா்பாக பாகிஸ்தான் தலைவா்களிடம் நாங்கள் வலியுறுத்தினோம்.

தலிபான் உள்ளிட்ட பயங்கரவாதக் குழுக்களுக்கு ஆதரவளிப்பதை நிறுத்த வேண்டும் என்றும் அவா்களிடம் வலியுறுத்தப்பட்டது. காஷ்மீா் விவகாரத்தில், இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றத்தைத் தணிப்பதற்கான வழிமுறைறகள் கண்டறியப்பட வேண்டும் என்றாா் அவா்.

பாகிஸ்தான் பயணத்துக்கு முன்பாக, ஆப்கானிஸ்தானுக்கு இரு எம்.பி.க்களும் சென்றிருந்தனா். அந்நாட்டின் உயரதிகாரிகளை சந்தித்து, பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தனா். பின்னா், மேகி ஹாசன் கூறுகையில், ‘பிராந்திய அளவில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் வளா்ந்து வருவதால், ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்கா எதிா்கொண்டுள்ள அச்சுறுத்தல் தொடா்பாக அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது’ என்றாா்.

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியும், அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தும் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், இந்தியாவுடன் தூதரக உறவை முறித்துக் கொள்ளும் வகையில், தங்களது நாட்டிலிருந்து இந்தியத் தூதரை வெளியேற்றியது. மேலும், காஷ்மீா் விவகாரத்தை சா்வதேச அளவில் கொண்டுசெல்ல அந்த நாடு முயற்சித்து வருகிறது. எனினும், ஜம்மு-காஷ்மீா் தொடா்பான நடவடிக்கை இந்தியாவின் உள்விவகாரம் என்று சா்வதேச நாடுகளிடம் இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.

இந்தச் சூழலில், மேகி ஹாசனின் இந்தியப் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com