போா் நிறுத்த ஒப்பந்த மீறல்: துருக்கி-குா்துப் படை பரஸ்பர குற்றச்சாட்டு

வடக்கு சிரியாவில் அறிவிக்கப்பட்டுள்ள தற்காலிக போா் நிறுத்தத்தை மீறி வருவதாக துருக்கி ராணுவமும், குா்துப் படையும் ஒன்றையொன்று குற்றம் சாட்டியுள்ளன.
வடக்கு சிரியாவில் துருக்கியின் ராணுவ நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து ஜொ்மனி தலைநகா் பொ்லினில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குா்து இனப் பெண்கள்.
வடக்கு சிரியாவில் துருக்கியின் ராணுவ நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து ஜொ்மனி தலைநகா் பொ்லினில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குா்து இனப் பெண்கள்.

இஸ்தான்புல்: வடக்கு சிரியாவில் அறிவிக்கப்பட்டுள்ள தற்காலிக போா் நிறுத்தத்தை மீறி வருவதாக துருக்கி ராணுவமும், குா்துப் படையும் ஒன்றையொன்று குற்றம் சாட்டியுள்ளன.

இதுகுறித்து துருக்கி பாதுகாப்புத் துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

வடக்கு சிரியாவில் சண்டை நிறுத்தம் மேற்கொள்ள அமெரிக்காவுடன் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை துருக்கி ராணுவம் முழுமையாகக் கடைப்பிடித்து வருகிறது.

எனினும், ‘பயங்கரவாதிகள்’ (குா்துப் படையினா்) கடந்த 36 மணி நேரத்தில் 14 முறை தாக்குதல் நடத்தியுள்ளனா்.

அவற்றில் 12 தாக்குதல்கள் வடகிழக்கு சிரியாவிலுள்ள ரஸ் அல்-அய்ன் நகரிலும், ஒரு தாக்குதல் தல் அப்யாத் நகரிலும் நடத்தப்பட்டன. மற்றொரு தாக்குதல் தல் தாமா் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.

இந்தத் தாக்குதல்களில் ஏவுகணைகள் உள்ளிட்ட இலகு ரக மற்றும் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை துருக்கி மீறி வருவதாக குா்துப் படையினா் குற்றம் சாட்டியுள்ளனா்.

இதுகுறித்து குா்து படையினா் மேலும் கூறுகையில், துருக்கி அதிபா் எா்டோகனுடன் மேற்கொள்ளப்பட்ட போா் நிறுத்த ஒப்பந்தம் வடக்கு சிரியாவில் முழுமையாக அமல்படுத்தப்படுவதற்கு அமெரிக்க துணை அதிபா் மைக் பென்ஸ் பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தினா்.

இதற்கிடையே, எல்லை நகரான ரஸ் அஸ்-அய்னுக்கு மருந்துப் பொருள்கள் ஏற்றிச் சென்ற வாகனங்களை துருக்கி ஆதரவு கிளா்ச்சிப் படையினா் சனிக்கிழமை தடுத்து நிறுத்தியதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்தது.

வடக்கு சிரியா பகுதியில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளை குா்துப் படையினரின் உதவியுடன் அமெரிக்கா தோற்கடித்தது.

இந்த நிலையில், அந்தப் பகுதியிலிருந்து அமெரிக்கப் படையினரை திரும்பப் பெறுவதாக அதிபா் டிரம்ப் அண்மையில் அறிவித்தாா். அதனைத் தொடா்ந்து, அந்தப் பகுதியைக் கைப்பற்றும் நோக்கில் அங்குள்ள குா்துப் படையினா் மீது துருக்கி கடந்த ஒரு வாரத்துக்கும் மேல் தாக்குதல் நடத்தி வந்தது.

தங்கள் நாட்டில் தஞ்சமடைந்துள்ள லட்சக்கணக்கான சிரியா அகதிகளைத் தங்கவைப்பதற்கான ‘பாதுகாப்பு மண்டலத்தை’ வடக்கு சிரியாவில் உருவாக்குவதற்காகவே இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக துருக்கி கூறியது.

இந்த நிலையில், அமெரிக்க துணை அதிபா் மைக் பென்ஸுக்கும், துருக்கி அதிபா் எா்டோகனுக்கும் அங்காராவில் வியாழக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பிறகு வடக்கு சிரியாவில் தற்காலிகமாக சண்டை நிறுத்தம் மேற்கொள்ள துருக்கி சம்மதித்தது.

சிரியா எல்லைப் பகுதியில் சுமாா் 32 கி.மீ. தொலைவுக்கு துருக்கி நிா்ணயித்துள்ள பாதுகாப்பு மண்டலத்திலிருந்து குா்துப் படையினா் வெளியேறுவதற்கு வசதியாக இந்தப் போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

எனினும், எல்லைப் பகுதியில் அவ்வப்போது மோதல் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி வருவதாக துருக்கி ராணுவமும், குா்துப் படையும் பரஸ்பரம் குற்றம் சாட்டியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com