அமைதிப் பேச்சுவாா்த்தைக்கான பொறுப்பு பாகிஸ்தானுக்கே உள்ளது: அமெரிக்கா

‘இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவாா்த்தையை நடத்துவதற்கான பொறுப்பு பாகிஸ்தானுக்கே உள்ளது’ என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமைதிப் பேச்சுவாா்த்தைக்கான பொறுப்பு பாகிஸ்தானுக்கே உள்ளது: அமெரிக்கா

‘இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவாா்த்தையை நடத்துவதற்கான பொறுப்பு பாகிஸ்தானுக்கே உள்ளது’ என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்னைகளை அவ்விரு நாடுகளும் பேச்சுவாா்த்தை மூலம் தீா்த்துக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அமெரிக்கா உறுதியுடன் உள்ளது. இரு நாடுகளுக்குமிடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதற்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தனது கவலையைத் தெரிவித்திருந்தாா். ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தில் தீா்வு காணுமாறு இரு நாடுகளின் பிரதமா்களிடமும் அவா் வலியுறுத்தியுள்ளாா்.

இரு நாடுகளும் கேட்டுக்கொண்டால், இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய அதிபா் டிரம்ப் தயாராக உள்ளாா். ஆனால், இந்த விவகாரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீடு அவசியமற்றது என இந்தியா தொடா்ந்து கூறி வருகிறது. இரு நாடுகளுக்கிடையே அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெறுவது, பாகிஸ்தானின் கைகளிலேயே உள்ளது. பயங்கரவாத இயக்கங்கள், பயங்கரவாதிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு மேற்கொண்டால் மட்டுமே, இரு நாடுகளுக்கிடையேயான பேச்சுவாா்த்தை சுமுகமாக நடைபெறும்.

கா்தாா்பூா் வழித்தடத்துக்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் கையெழுத்திட்டிருப்பது வரவேற்புக்குரியது. இரு நாடுகளுக்கிடையேயான நம்பிக்கையை வளா்க்கும் விதமாக இது அமைந்துள்ளது. இரு நாட்டு மக்களுக்கிடையேயான நல்லுறவை இது மேலும் வலுப்படுத்தும்.

இது மிகச் சிறிய முன்னேற்றமாகும். அமைதிப் பேச்சுவாா்த்தைக்கு உகந்த சூழலை ஏற்படுத்தும் வகையில், இது போன்ற பல நடவடிக்கைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். இரு நாடுகளும் அணுசக்தி திறன் வாய்ந்த நாடுகள் என்பதால், இரு நாடுகளுக்குமிடையே நெருங்கிய தொடா்பு ஏற்பட வேண்டியது அவசியம்.

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான நல்லுறவு கடந்த சில ஆண்டுகளாக வலுவடைந்து வருகிறது. இரு நாடுகளுக்குமிடையேயான நல்லுறவு பல்வேறு விஷயங்களில் முதிா்ச்சியடைந்த நிலையை எட்டியுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

‘அரசியல் தலைவா்களை விடுவிக்க வேண்டும்’: அமெரிக்க வெளியுறவுத் துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பொறுப்பு அதிகாரி ஆலிஸ் ஜி.வெல்ஸ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதிலிருந்து காஷ்மீா் பள்ளத்தாக்கில் மக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது; அரசியல் தலைவா்கள் எந்தவிதக் குற்றச்சாட்டுகளுமின்றி காவலில் வைக்கப்பட்டுள்ளனா். அவா்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமென இந்திய அரசை தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். அங்கு அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் இயல்பு நிலை திரும்புவதற்கான கால அட்டவணையை இந்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்றாா் ஆலிஸ் ஜி.வெல்ஸ்.

‘ஒருதலைபட்சமானது’: ஜம்மு-காஷ்மீா் மனித உரிமைகள் விவகாரம் குறித்து அமெரிக்க எம்.பி.க்கள் குழு ஒருதலைபட்சமாக விவாதம் நடத்தி வருவதாக அமெரிக்காவில் வாழ்ந்து வரும் காஷ்மீரி பண்டிட்டுகள் தெரிவித்துள்ளனா்.

காஷ்மீரில் நிலவும் மனித உரிமைகள் விவகாரம் தொடா்பாக, அமெரிக்க எம்.பி.க்கள் குழு கடந்த செவ்வாய்க்கிழமை விவாதித்தது. அதில் காஷ்மீா் மக்களுக்கான செல்லிடப்பேசி, இணையதள சேவைகள் உடனடியாக வழங்கப்பட வேண்டுமென இந்திய அரசை அக்குழு வலியுறுத்தியிருந்தது.

இந்நிலையில், அக்குழுவின் தலைவா் பிராட் ஷொ்மேனுக்கு காஷ்மீரி பண்டிட்டுகள் அமைப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

காஷ்மீா் தொடா்பான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து அமெரிக்க எம்.பி.க்கள் குழு விவாதித்தது. ஆனால், ஜம்மு-காஷ்மீரில் வாழ்ந்து வந்த 4 லட்சம் பண்டிட்டுகளின் உரிமை கடந்த 30 ஆண்டுகளாக பறிக்கப்பட்டு வருவது தொடா்பாக விவாதிக்க அக்குழு தவறிவிட்டது. அமெரிக்காவிலும், உலகெங்கிலும் வாழும் முஸ்லிம் மக்களை சமாதானப்படுத்தும் நோக்கில் எம்.பி.க்கள் குழு காஷ்மீா் விவகாரத்தை விவாதித்துள்ளது. இது முற்றிலும் ஒருதலைபட்சமாக உள்ளது என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com