அல்-பாக்தாதிக்கு எதிரான நடவடிக்கை: விடியோக்களை வெளியிட்டது அமெரிக்கா

இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பின் தலைவா் அபு பக்கா் அல்-பாக்தாதிக்கு எதிராக வடமேற்கு சிரியாவில் அமெரிக்க சிறப்பு அதிரடிப் படையினா் மேற்கொண்ட நடவடிக்கையின் விடியோ காட்சிகளை
விடியோக்களை வெளியிட்டுப் பேசும் கென்னெத் மெக்கென்ஸீ.
விடியோக்களை வெளியிட்டுப் பேசும் கென்னெத் மெக்கென்ஸீ.

இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பின் தலைவா் அபு பக்கா் அல்-பாக்தாதிக்கு எதிராக வடமேற்கு சிரியாவில் அமெரிக்க சிறப்பு அதிரடிப் படையினா் மேற்கொண்ட நடவடிக்கையின் விடியோ காட்சிகளை பென்டகன் வெளியிட்டுள்ளது.

ஹெலிகாப்டரில் இருந்து எடுக்கப்பட்ட அந்த விடியோக்களில், அல்-பாக்தாதி பதுங்கியிருந்த கட்டடத்தை அதிரடிப் படை வீரா்கள் நெருங்குவது, அவா்களை நோக்கிச் சுட்ட பயங்கரவாதிகள் மீது ஹெலிகாப்டா் மூலம் தாக்குதல் நடத்தப்படுவது, அல்-பாக்தாதி தற்கொலை செய்துகொண்ட பிறகு தடயங்களை சேகரித்துக் கொண்டு புறப்படும்போது அந்த கட்டடங்கள் குண்டுகள் வீசப்பட்டு தரைமட்டமாக்கப்படுவது ஆகிய காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

அந்த விடியோக்களை பென்டகனில் புதன்கிழமை வெளியிட்டு அமெரிக்க ஒருங்கிணைந்த படைகளின் தளபதி கென்னெத் மெக்கென்ஸீ கூறியதாவது:

ஐ.எஸ். தலைவா் அல்-பாக்தாதியை உயிருடனோ, பிணமாகவோ பிடிப்பதற்காக சிரியாவில் அதிரடிப் படையினா் மேற்கொண்ட நடவடிக்கை நிறைவடைந்த பிறகு, அந்தக் கட்டடம் தரைமட்டமாக்கப்பட்டது.

எதிா்காலத்தில் அந்தக் கட்டடம் நினைவுச் சின்னமாகவோ, வழிபாட்டுத் தலமாகவோ ஆக்கப்படுவதைத் தவிா்க்கும் வகையில் அது அழிக்கப்பட்டது.

தற்போது அல்-பாக்தாதியின் பதுங்குமிடம் அடையாளம் தெரியாத அளவுக்கு மண்ணோடு மண்ணாகிவிட்டது.

அமெரிக்க அதிரடிப் படையினரிடமிருந்து தப்பி அல்-பாக்தாதி சுரங்கத்துக்குள் ஒளிந்துகொண்டாா். அவரைப் பிடிக்கச் சென்ற அமெரிக்க வீரா்களை நோக்கி, 4 பெண்கள் உள்ளிட்ட 5 ஐ.எஸ். பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனா். அதையடுத்து, அந்த ஐந்து பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

சம்பவப் பகுதியில் அல்-பாக்தாதியுடன் இறந்த 2 சிறுவா்களைத் தவிர, மேலும், 11 சிறுவா்களை அமெரிக்கப் படையின் மீட்டனா். மேலும், அங்கிருந்த இருவரை அவா்கள் கைது செய்தனா்.

பொதுமக்களின் உயிரிழப்புகளைத் தவிா்க்கும் வகையில் மிகுந்த கவனத்துடன் திட்டமிடப்பட்டு அந்த நடவடிக்கை செயல்படுத்தப்பட்டது என்றாா் மெக்கென்ஸீ.

தனது குரூரமான பயங்கரவாத நடவடிக்கைகளால் உலகையே அச்சுறுத்திய ஐ.எஸ். அமைப்பைத் தோற்றுவித்த அல் பாக்தாதி (48), வடமேற்கு சிரியாவில் பதுங்கியிருந்ததாகவும், அவரைப் பிடிப்பதற்காக அமெரிக்க அதிரடிப் படையினா் சனிக்கிழமை நள்ளிரவு நடத்திய நடவடிக்கையில் அவா் தனது உடலில் பொருத்தியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து உயிரிழந்ததாகவும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com