காஷ்மீர் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்: ஐ.நா பொதுச்செயலாளர்

ஜம்மு-காஷ்மீர் பிரச்னைக்கு இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் (கோப்புப்படம்)
ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் (கோப்புப்படம்)


ஜம்மு-காஷ்மீர் பிரச்னைக்கு இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் நேற்று (செவ்வாய்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அன்டோனியோ குட்டெரெஸ் நிலைப்பாடு குறித்து பேசிய அவர், 

"பொதுவாகவும் சரி, தனிப்பட்ட முறையிலும் சரி, அவருடைய தகவல் அனைவருக்கும் பொதுவானதுதான். இந்தியா, பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் பதற்றமான சூழல், அவருக்கு தொடர்ந்து கவலையளித்து வருகிறது. இந்த விவகாரத்தை இருதரப்பும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்" என்றார்.

ஐ.நா. பொதுக்கூட்டம் இந்த மாதம் கடைசியில் நடைபெறவுள்ளது. இதில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் பங்கேற்கவுள்ளனர். எனவே, இந்தக் கூட்டத்தின்போது காஷ்மீர் விவகாரம் குறித்து இருநாட்டு தலைவர்கள் மத்தியில் ஐ.நா. பொதுச்செயலாளர் மத்தியஸ்தம் செய்வாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அவர், "பொதுவாக மத்தியஸ்தம் என்பதில் ஐ.நா.வுக்கு என்று ஒரு கொள்கை நடைமுறை உள்ளது. அதில் இதுவரை எந்தவித மாற்றமும் கிடையாது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் அண்மையில் தெரிவித்திருந்ததுபோல் மக்களின் உரிமைகளுக்கு முழு மதிப்பளிக்க வேண்டும். அதன் மூலமாகத்தான் காஷ்மீரில் நிலவும் சூழலுக்கு தீர்வு காண முடியும்" என்றார்.

மேலும் படிக்க: காஷ்மீரில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்: ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத் தலைவர்

முன்னதாக, நேற்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 42-வது கூட்டத்தில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் வலியுறுத்தியிருந்தது. இதற்குப் பதிலடி தரும் வகையில் பேசிய இந்தியா, இது உள்நாட்டு விவகாரம் என்றும் காஷ்மீர் குறித்து பேச பாகிஸ்தானுக்கு எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது என்றும் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com