இஸ்ரேல் தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகுவுக்குப் பின்னடைவு

இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வலதுசாரிக் கூட்டணிக்கு
டெல் அவிவ் நகரிலுள்ள லிக்குட் கட்சி தேர்தல் பிரசார தலைமையகத்தில் ஆதரவாளர்களை நோக்கி கையசைக்கும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு.
டெல் அவிவ் நகரிலுள்ள லிக்குட் கட்சி தேர்தல் பிரசார தலைமையகத்தில் ஆதரவாளர்களை நோக்கி கையசைக்கும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு.


இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வலதுசாரிக் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காததால் அவருக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தேர்தலில், நெதன்யாகு தலைமையிலான லிக்குட் கட்சியும், எதிர்க்கட்சியான புளூ அண்டு ஒயிட் கட்சியும் தலா 32 இடங்களைக் கைப்பற்றியுள்ளதாக பூர்வாங்க முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் இணையதள ஊடகம் தெரிவித்துள்ளதாவது: 120 இடங்களைக் கொண்ட  நாடாளுமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தலில், 91 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் பிரதமர் நெதன்யாகுவின் லிக்குட் கட்சியும், முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி பெஞ்சமின் காண்ட்ஸ் தலைமையிலான புளூ அண்டு ஒயிட் கட்சியும் தலா 32 இடங்களைப் பெற்றுள்ளன.
மூன்றாவது இடத்தில் அரபு இஸ்ரேல் கட்சிகளின் கூட்டமைப்பான ஜாயின்ட் லிஸ்ட் 12 இடங்களைக் கைப்பற்றியது. மதப் பழைமைவாதக் கட்சியான ஷாஸுக்கு 9 இடங்கள் கிடைத்துள்ளன.
பிரதமர் நெதன்யாகுவின் லிக்குட் கட்சியும், அவருக்கு ஆதரவளிக்கக் கூடிய வலதுசாரிக் கட்சிகளும் மொத்தம் 55 இடங்களைப் பெற்றுள்ளன. ஆட்சியமைப்பதற்கு 61 இடங்கள் தேவைப்படும் நிலையில், இது 6 இடங்கள் குறைவாகும்.
வாக்குக் கணிப்புகள் தெரிவித்தது போலவே, மதச்சார்பற்ற இஸ்ரேல் பெய்டீனு கட்சி 9 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. 
இதன் மூலம், புதிய அரசை அமைப்பதில் அந்தக் கட்சியின் தலைவர் ஏவிக்டார் லீபர்மேன் முக்கியப் பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ஏற்கெனவே அவர் கூறுகையில், பல கட்சிகளும் இடம் பெறும் மிதவாத தேசிய அரசை அமைப்பதற்கு ஆதரவளிக்கப் போவதாக அவர் தெரிவித்திருந்தார்.
மேலும், எந்தக் கூட்டணியிலும் தாம் இணையப்போவதில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
இதற்கிடையே, 12 இடங்களைக் கைப்பற்றியுள்ள அரபு இஸ்ரேல் கட்சிகளின் கூட்டமைப்பான ஜாயின்ட் லிஸ்ட்டுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்கப் போவதில்லை என்று பெஞ்சமின் நெதன்யாகுவும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இஸ்ரேல் வீரர்கள், பொதுமக்கள், சிறுவர்களை படுகொலை செய்யும் பயங்கரவாதிகளை பெருமையாகப் பேசி வரும் அரபு இஸ்ரேலியக் கட்சிகளுடன் இணைந்து ஒருபோதும் ஆட்சியமைக்க மாட்டேன் என்று தெரிவித்தார் என டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது. இந்தத் தேர்தலில் எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காது எனவும், தேசிய அரசு அமைவதற்கே வாய்ப்புள்ளதாகவும் ஏற்கெனவே வாக்குக் கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் பிரதமர் நெதன்யாகு தலைமையிலான லிக்குட் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியது.
இதன் மூலம், அவர் 5-ஆவது முறையாக நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்று சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், ஆட்சியமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை பலத்தை அவரால் பெற முடியாததால், 21-ஆவது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, 22-ஆவது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இஸ்ரேல் வரலாற்றிலேயே, தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, மறுதேர்தல் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இந்தத் தேர்தலிலும் யாருக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காததால், பல கட்சிகள் பங்கேற்கும் தேசிய அரசு அமைவதற்கான சூழல் தற்போது உருவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com