பாரசீக வளைகுடாவுக்கு கூடுதல் படைகளை அனுப்புகிறது அமெரிக்கா

சவூதி அரேபிய எண்ணெய் ஆலைகளில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, பாரசீக வளைகுடா பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக கூடுதல் படையினரை அனுப்பி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
பாரசீக வளைகுடாவுக்கு கூடுதல் படைகளை அனுப்புகிறது அமெரிக்கா

சவூதி அரேபிய எண்ணெய் ஆலைகளில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, பாரசீக வளைகுடா பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக கூடுதல் படையினரை அனுப்பி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மேலும், அந்தத் தாக்குதலுக்குக் காரணம் என குற்றம் சாட்டப்படும் ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிப்பதாகவும் அந்த நாடு அறிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்க் எஸ்பெர் கூறியதாவது:
தங்களது எண்ணெய் ஆலைகளில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்பை அதிகரிக்குமாறு அமெரிக்காவை சவூதி அரேபியா கேட்டுக் கொண்டது. அதனை ஏற்று, பாரசீக வளைகுடா பகுதிக்கு கூடுதல் படைகளை அனுப்ப அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
தற்போது கூடுதலாக அனுப்பப்படும் படைகள் தற்காப்புக்கானவை மட்டுமே. எதிரிகளின் விமானங்கள், ஏவுகணைகள் ஆகியவற்றிலிருந்து வான் எல்லையைப் பாதுகாப்பதற்காகவே கூடுதல் படைகள் அனுப்பப்படுகின்றன என்றார் அவர். 
எனினும், கூடுதல் படைகுவிப்பு  மிதமாகவே இருக்கும் என்றும், கூடுதலாக ஆயிரத்துக்கும் குறைவான வீரர்களே அனுப்பப்படுவதாகவும் பாதுகாப்புத் துறை அமைச்சரின் ஆலோசனைக் குழுத் தலைவர் ஜோ டன்ஃபோர்டு தெரிவித்தார்.
கடுமையான பொருளாதாரத் தடை: எண்ணெய் ஆலைத் தாக்குதல் எதிரொலியாக, ஈரான் மீது கூடுதல் பொருளாதாரத் தடை விதிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். 
அதையடுத்து, ஈரானின் மத்திய வங்கி மீது அமெரிக்க நிதியமைச்சகம் மேலும் கடுமையான தடைகளை விதித்துள்ளது.
இதுகுறித்து டிரம்ப் கூறுகையில், தற்போது ஈரான் மீது விதிக்கப்பட்ட அளவுக்கு மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா வேறு எந்த நாட்டின் மீதும் விதித்ததில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
ஈரானுக்கும், வல்லரசு நாடுகளுக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து கடந்த ஆண்டு விலகிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் நீக்கப்பட்டிருந்த ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்தினார்.
இதன் காரணமாக அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்காவின் கூட்டாளியான சவூதி அரேபியாவின் அப்காய்க் பகுதியிலுள்ள கச்சா எண்ணெய் ஆலையிலும், குராயிஸ் பகுதியிலுள்ள எண்ணெய் வயலிலும் ஆளில்லா விமானங்கள் மூலம் ஹூதி கிளர்ச்சியாளர்கள் கடந்த வாரம் தாக்குதல் நடத்தினர்.
யேமனில் தங்கள் மீது சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படை நடத்தி வரும் வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக அந்தத் தாக்குதலை நடத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.
எனினும், அந்தத் தாக்குதலை ஈரான்தான்  நடத்தியது என்று அமெரிக்காவும், சவூதி அரேபியாவும் குற்றம் சாட்டி வருகின்றன.  இந்தச் சூழலில், சவூதி  அரேபியா மீது மீண்டும் தாக்குதல் நடைபெறுவதைத் தடுப்பதற்காக வளைகுடாவுக்கு அமெரிக்கா கூடுதல் படைகளை அனுப்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com