பேசுவதற்கான நேரம் முடிந்துவிட்டது, செயல்படுவதற்கான நேரம் இது: பருவநிலை மாற்றம் குறித்து பிரதமர் மோடி

பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, பேசுவதற்கான நேரம் முடிந்துவிட்டது, இது செயல்படுவதற்கான நேரம் என்றார்.
பேசுவதற்கான நேரம் முடிந்துவிட்டது, செயல்படுவதற்கான நேரம் இது: பருவநிலை மாற்றம் குறித்து பிரதமர் மோடி


பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, பேசுவதற்கான நேரம் முடிந்துவிட்டது, இது செயல்படுவதற்கான நேரம் என்றார்.

ஐ.நா. பொதுச் சபையில் பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், 

"பருவநிலை மாற்றம் போன்ற முக்கியமான சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்றால், தற்போது நாம் செய்து கொண்டிருப்பது போதாது என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். இதுகுறித்து பேசுவதற்கான நேரம் முடிந்துவிட்டது. ஒட்டுமொத்த உலகமும் செயல்படுவதற்கான நேரம் இது. இந்த பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கு உலக மக்கள் இயக்கமாக செயல்படுவதுதான் தற்போதைய தேவையாக உள்ளது. 

புதுப்பிக்கத்தக்க மின்சக்தி திறனை நாங்கள் 175 ஜிகா வாட்டுக்கு மேல் அதிகரிக்கவுள்ளோம். அதை 450 ஜிகா வாட் வரை உயர்த்த உறுதிபூண்டுள்ளோம். இயற்கை மீது மரியாதை கொள்ளுதல், வளங்களை சரியாக பயன்படுத்துதல், நமது தேவைகளை குறைத்துக் கொள்ளுதல் உள்ளிட்டவை எங்களது பண்பாடு மற்றும் இன்றைய தேதியில் எங்களது முயற்சிகளின் முக்கிய அம்சங்களாக உள்ளன. 

அதனால், இந்தப் பிரச்னையின் முக்கியத்துவம் குறித்து பேசுவதற்காக மட்டும் இந்தியா இங்கு வரவில்லை. நடைமுறையில் இந்தப் பிரச்னையை எப்படி அணுக வேண்டும் என்பதை இங்கு பகிரவும், ஒரு முன்மாதிரியாக இருப்பதற்காகவும் இந்தியா வந்துள்ளது. பேசுவதைக் காட்டிலும் செயல்தான் முக்கியம் என்பதையே நாங்கள் நம்புகிறோம்" என்றார்.

இந்த மாநாட்டுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் வந்திருந்தார். ஆனால், பிரதமர் மோடியின் பேச்சைக் கேட்ட டிரம்ப் எந்தக் கருத்தும் கூறவில்லை. 

முன்னதாக, 2017-இல் பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மறுத்துவிட்டார். இந்த ஒப்பந்தம் மூலம் அதிக பயன்களைப் பெறும் நாடுகளுக்கு அமெரிக்கா செலவிட நேரிடும் என்று டிரம்ப் கருதினார். இந்த முடிவுக்கு டிரம்ப் இந்தியாவையும், சீனாவையுமே குற்றம்சாட்டினார்.   

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், பிரதமர் நரேந்திர மோடியும் நேற்று ஹூஸ்டன் நகரில் ஒரே மேடையில் பரஸ்பரம் நட்பு பாராட்டினர் என்பது இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com