ஆஸ்திரேலியாவில் செம்மறி ஆடுகள் ஏற்றுமதி மீண்டும் தொடக்கம்

நீண்ட தடைக்குப் பிறகு, செம்மறி ஆடுகள் ஏற்றுமதியை ஆஸ்திரேலியா மீண்டும் தொடக்கியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் செம்மறி ஆடுகள் ஏற்றுமதி மீண்டும் தொடக்கம்

நீண்ட தடைக்குப் பிறகு, செம்மறி ஆடுகள் ஏற்றுமதியை ஆஸ்திரேலியா மீண்டும் தொடக்கியுள்ளது.
செம்மறியாடுகள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகளைப் பிற நாடுகளுக்கு கப்பல்கள் மூலம் ஆஸ்திரேலியா ஏற்றுமதி செய்து வந்தது. இதன் மூலம் அந்நாட்டுக்கு ஆண்டுக்கு 1.35 பில்லியன் டாலர் வருமானம் கிடைத்து வந்தது. இந்நிலையில், செம்மறியாடுகளை ஏற்றிக்கொண்டு, மத்திய கிழக்கு நாடுகளுக்குக் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சென்ற கப்பலில், அதீத வெப்பம் காரணமாக பல செம்மறியாடுகள் இறந்தன.
இது தொடர்பான விடியோ சமூக வலைதளங்களில் பரவியதால், ஆஸ்திரேலியாவில் உயிருள்ள கால்நடைகளை ஏற்றுமதி செய்வதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, கால்நடைகளை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை அந்நாடு தற்காலிகமாக நிறுத்திவைத்தது. கால்நடைகளை ஏற்றுமதி செய்வதற்குப் புதிய விதிமுறைகளையும் ஆஸ்திரேலியா இயற்றியது.
அதன்படி, கப்பலில் கால்நடைகள் அடைக்கப்படும் இடம் காற்றோட்ட வசதி கொண்டதாக இருக்க வேண்டுமெனவும், கால்நடைகளைக் கண்காணிப்பதற்குத் தனி பராமரிப்பாளர்கள் இருக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டது. இவற்றை மீறும் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு சிறைத் தண்டனையுடன் கூடிய அபராதம் விதிக்கப்படும் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்தது.
இந்நிலையில், நீண்ட மாத தடைக்குப் பிறகு கால்நடைகள் ஏற்றுமதியை ஆஸ்திரேலியா தொடக்கியுள்ளது. சுமார் 60,000 செம்மறியாடுகளைக் கொண்ட கப்பல் குவைத் நாட்டுக்கு செவ்வாய்க்கிழமை புறப்பட உள்ளது. வரும் மாதங்களில் கால்நடைகள் ஏற்றுமதி அதிகரிக்கும் என அந்நாட்டு வணிகர்கள் தெரிவித்தனர்.
இருந்தபோதிலும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் பலர் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசு அறிவித்துள்ள புதிய விதிமுறைகள் பெரிய மாற்றம் எதையும் ஏற்படுத்தாது எனத் தெரிவித்து வரும் அவர்கள், கால்நடைகள் ஏற்றுமதிக்கு அரசு முற்றிலும் தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com