பிரிட்டன் நாடாளுமன்ற முடக்கம் சட்டவிரோதம்: உச்சநீதிமன்றம் அதிரடி

பிரிட்டன் நாடாளுமன்றம் முடக்கப்பட்டுள்ளது சட்டவிரோதமானது என்று அந்த நாட்டு உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற முடக்கம் சட்டவிரோதமானது என்று பிரிட்டன் உச்சநீதிமன்றம் அறிவித்ததைத் தொடர்ந்து, பிரதமர் போரிஸ் ஜான்ஸனுக்கு எதிராக நீதிமன்ற வளாகம் முன்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.
நாடாளுமன்ற முடக்கம் சட்டவிரோதமானது என்று பிரிட்டன் உச்சநீதிமன்றம் அறிவித்ததைத் தொடர்ந்து, பிரதமர் போரிஸ் ஜான்ஸனுக்கு எதிராக நீதிமன்ற வளாகம் முன்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

பிரிட்டன் நாடாளுமன்றம் முடக்கப்பட்டுள்ளது சட்டவிரோதமானது என்று அந்த நாட்டு உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீர்ப்பு, பிரெக்ஸிட் விவகாரத்தில் பிரதமர் போரிஸ் ஜான்ஸனுக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜீனா மில்லரால் தொடரப்பட்ட இந்த வழக்கில், உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அளித்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

நாடாளுமன்றத்தை முடக்கிவைக்க பிரதமர் போரிஸ் ஜான்ஸன் எடுத்த முடிவு, சட்டவிரோதமானதாகும். காரணம், அந்த முடிவால் நாடாளுமன்றத்தின் அரசியல் சாசன நடவடிக்கைகள் மிகக் கடுமையாக பாதிகப்பட்டுள்ளன.

அவ்வாறு நாடாளுமன்றம் முடக்கிவைக்கப்படுவதற்கு, ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணம் எதுவும் கூறப்படவில்லை.

இந்த முடிவு ஜனநாயகத்தின் அடித்தளத்தையே கடுமையாக பாதிக்கும்.

நாடாளுமன்றம் தற்போது முடக்கப்பட்டுள்ளது சட்டத்துக்குப் புறம்பானது என்று 11 நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஒருமனதாகக் கூறியுள்ளதையடுத்து, அந்த அறிவிப்பு செல்லாததாகிறது.

இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நாடாளுமன்ற இரு அவைகளின் தலைவர்களும்தான் முடிவெடுக்க வேண்டும் என்று அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகிய (பிரெக்ஸிட்) பிறகு, இரு தரப்பினருக்கும் இடையே சிறப்பு வர்த்தக உறவை பேணுவதற்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் விவகாரத்தில் இழுபறி நீடித்து வருகிறது.

அந்த ஒப்பந்தம் இல்லாமல் பிரெக்ஸிட் நிறைவேறினால், அது பிரிட்டன் பொருளாதாரத்தை மிகக் கடுமையாக பாதிக்கும் எனக் கூறப்படும் நிலையில், பிரெக்ஸிட்டுக்கான அக்டோபர் 31-ஆம் தேதி காலக்கெடுவை நீட்டிக்க பெரும்பாலான எம்.பி.க்கள் விரும்புவதாகக் கூறப்படுகிறது.

எனினும், அந்த முயற்சியைத் தடுக்கும் வகையில் நாடாளுமன்றத்தை இந்த மாதம் 9-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 14-ஆம் தேதி வரை முடக்கிவைக்க பிரதமர் போரிஸ் ஜான்ஸன் உத்தரவிட்டார்.

எதிர்க்கட்சியினர் மற்றும் ஆளும் கட்சியின் ஒரு பிரிவினரிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த முடிவை எதிர்த்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரெக்ஸிட் எதிர்ப்பு பிரசாரகர் ஜீனா மில்லர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை விசாரித்து வந்த நீதிமன்றம், நாடாளுமன்ற முடக்கம் சட்டவிரோதமானது என்று தற்போது அறிவித்துள்ளது இந்த விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இறையாண்மைக்குக் கிடைத்த வெற்றி!

நாடாளுமன்ற முடக்கத்துக்கு எதிரான வழக்கில் தனக்குக் கிடைத்துள்ள வெற்றி, நாடாளுமன்றத்தின் இறையாண்மைக்குக் கிடைத்த வெற்றி என ஜீனா மில்லர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்த வழக்கில் தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, பிரிட்டனில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதை நிரூபித்துள்ளது. சட்டம் அனைவருக்கும் சமம் என்பதையும், பிரதமராக இருந்தால் கூட அவர் சட்டத்துக்கு உள்பட்டவரே என்பதையும் இந்தத் தீர்ப்பு பறைசாற்றியுள்ளது.

இந்த வெற்றி தனி நபருக்குக் கிடைத்த வெற்றி அல்ல. நாடாளுமன்ற இறையாண்மை, பிரிட்டன் நீதிமன்றங்களின் சுதந்திரத் தன்மை ஆகியவற்றுக்கும் இந்த வெற்றி உரித்தானது ஆகும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com