பயங்கரவாதத்தைத் தடுக்க சர்வதேச அமைப்பு: பிரதமர் மோடி வலியுறுத்தல்

உலகம் முழுவதும் நிகழ்த்தப்பட்டு வரும் பயங்கரவாதச் செயல்களைத் தடுத்து நிறுத்த சர்வதேச அமைப்பை உருவாக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். 
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கத்தார் அரசர் ஷேக் தமீம் பின் ஹமாதை சந்தித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கத்தார் அரசர் ஷேக் தமீம் பின் ஹமாதை சந்தித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி.

உலகம் முழுவதும் நிகழ்த்தப்பட்டு வரும் பயங்கரவாதச் செயல்களைத் தடுத்து நிறுத்த சர்வதேச அமைப்பை உருவாக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். 

பயங்கரவாதத் தாக்குதல்களில் சிறியது, பெரியது என்ற வேறுபாடு எதுவுமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் 74-ஆவது ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தின் ஒரு பகுதியாக, பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதச் செயல்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தான கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி உரையாற்றியதாவது:

பயங்கரவாதிகளுக்கும், பயங்கரவாத அமைப்புகளுக்கும் நிதி கிடைப்பதையும், ஆயுதங்கள் கிடைப்பதையும் தடுக்க வேண்டும். இதற்காக, அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்துக்கு எதிரான சர்வதேச அமைப்பை உருவாக்க வேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிரான மனநிலை கொண்ட அனைத்து நாடுகளையும் ஓரணியில் இணைக்கும் முயற்சியில் இந்தியா தொடர்ந்து செயல்படும்.

பயங்கரவாதிகள் மீது ஐ.நா. விதிக்கும் தடைகளிலும், பயங்கரவாதத்துக்கான நிதி தடுப்பு அமைப்பு (எஃப்ஏடிஎஃப்) செயல்படுவதிலும் எந்தவித அரசியல் தலையீடும் இல்லாததை உறுதி செய்ய வேண்டும். உலகின் எந்த மூலையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினாலும், அதை பயங்கரவாதமாகவே கருத வேண்டும். 

பயங்கரவாதத் தாக்குதல்களில் சிறியது, பெரியது என்ற வேறுபாடோ, நல்லது, கெட்டது என்ற வேறுபாடோ கிடையாது.

பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்களை வழங்குவதில் பல்வேறு நாடுகளுக்கிடையே தற்போது காணப்படும் ஒத்துழைப்பு அதிகரிக்கப்பட வேண்டும். நாடுகளுக்கிடையேயான இருதரப்பு நல்லுறவு மூலமோ, பிராந்திய நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தங்கள் மூலமோ பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான எச்சரிக்கைகள் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டும்.

உலகநாடுகளின் தலைவர்களுடன் சந்திப்பு: ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தின் ஒரு பகுதியாக, உலகநாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல், இத்தாலி பிரதமர் ஜிசெப் கோன்டே, கத்தார் அரசர் ஷேக் தமீம் பின் ஹமாத், கொலம்பியா அதிபர் இவான் மார்க்கெஸ், நைஜர் அதிபர் இசோஃபு மகமது, நமீபியா அதிபர் ஹகே கெய்கோப், மாலத்தீவுகள் அதிபர் இப்ராஹிம் முகமது சோலி, பூடான் பிரதமர் லோதே ஷேரிங், நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே உள்ளிட்டோரை பிரதமர் மோடி திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்.

இருதரப்பு விவகாரங்களுக்கு முக்கியத்துவம்: இந்தச் சந்திப்புகள் தொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கத்தார் நாட்டில் வசித்து வரும் இந்திய வம்சாவளியினர் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அளித்து வரும் பங்களிப்பு குறித்து கத்தார் அரசர் மகிழ்ச்சி தெரிவித்தார். 

பிராந்தியத்தில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து இருநாட்டுத் தலைவர்களும் ஆலோசித்தனர்.

நைஜர் நாட்டில் மகாத்மா காந்தி சர்வதேச மையம் அமைப்பதற்கு இந்தியா சார்பில் ரூ.245 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டது. அந்த மையத்துக்கான கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. வேளாண்துறையிலும், சூரிய மின்உற்பத்தித் துறையிலும் இந்தியாவுடனான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த நைஜர் அதிபர் விருப்பம் தெரிவித்தார்.

பல்வேறு நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்பின்போது, இருதரப்பு உறவுகள் குறித்தான பேச்சுவார்த்தைக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது என்றார் ரவீஷ் குமார்.

வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு:  வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஈரான், பல்கேரியா, துருக்கி, நெதர்லாந்து, கயானா, தஜிகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

பயங்கரவாதத்தை அழிக்கும் ஆயுதங்கள்

மக்களாட்சிக் கூறுகளும், பன்முகத்தன்மையும், ஒருங்கிணைந்த வளர்ச்சியுமே பயங்கரவாதம், தீவிரவாதம் உள்ளிட்டவற்றை அழிக்கும் ஆயுதங்களாகும். பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள உலக நாடுகள் ஓரணியில் திரள்வதைப் போன்று, பயங்கரவாதத்துக்கு எதிராகவும் அனைத்து நாடுகளும் ஒன்றுதிரள வேண்டும் என்றார் பிரதமர் மோடி.

இந்தக் கூட்டத்தின்போது, பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் இணையதளத்தில் காணப்படும் பதிவுகளையும், கருத்துகளையும் நீக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதற்கு இந்தியா தனது ஆதரவைத் தெரிவித்தது. இந்தியாவின் ஆதரவுக்கு பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் வரவேற்பு தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com