மொரீஷியஸ் கடலில் எண்ணெய்க் கசிவு: இதுவரை 40 டால்பின்கள் பலி

மொரீஷியஸ் கடலில் ஜப்பான் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பலில் இருந்து எண்ணைய்க் கசிந்ததைத் தொடர்ந்து இதுவரை 40 டால்பின்கள் இறந்துள்ளது தெரியவந்துள்ளது.
கரை ஒதுங்கிய டால்பின்
கரை ஒதுங்கிய டால்பின்

மொரீஷியஸ் கடலில் ஜப்பான் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பலில் இருந்து எண்ணைய்க் கசிந்ததைத் தொடர்ந்து இதுவரை 40 டால்பின்கள் இறந்துள்ளது தெரியவந்துள்ளது.

ஜப்பான் நிறுவனத்திற்கு சொந்தமான எம்.வி.வகாஷியோ எனும் கப்பல் 3800 டன் எரிபொருளுடன்  ஜூலை 25 அன்று இந்தியப் பெருங்கடல் தீவுக்கு வெளியே பயணித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஒரு பாறையில் மோதி நின்றது. இதனால் கப்பலில் இருந்த எரிபொருள்கள் கடலில் கசியத் தொடங்கின.

கப்பலில் இருந்து எரிபொருள் கசிவதைத் தடுக்கும் முயற்சியில் மொரீஷியஸ் இறங்கியது. எனினும் எண்ணெய் கசிவு நெருக்கடி மோசமடைவதால் மொரீஷியஸ் அரசு அவசர நிலையை அறிவித்தது

மொரீஷியஸின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் கடற்கரையில் இன்னும் பெரிய கசிவு மற்றும் பேரழிவு தரக்கூடிய சேதம் ஏற்படக்கூடும் என்று சுற்றுச்சூழல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

தொடர்ந்து மொரீஷியஸ் கடலில் எரிபொருள் கசிவிற்கு காரணமான ஜப்பான் கப்பலின் மாலுமி கைது செய்யப்பட்டார்.

கடலில் கசியும் எரிபொருளால் மொரீஷியஸ் நாட்டின் கடல்வளம் பாதிக்கப்படும் என அந்நாடு கவலை தெரிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை மொரீஷியஸ் கடற்கரையில் 17 டால்பின்கள் இறந்தநிலையில் கரை ஒதுங்கின.

இதற்கு விளக்கமளித்த மொரீஷியஸின் மீன்வளத்துறை அமைச்சகம், "இறந்த டால்பின்களின் தாடைகளைச் சுற்றி பல காயங்களும் இரத்தமும் இருந்தன. ஆயினும் எண்ணெய் கசிவு காரணமல்ல.” என்று மறுப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இதுவரை 40 டால்பின்கள் இறந்துள்ளதாகவும் 200க்கு அதிகமான டால்பின்கள் எண்ணெய்கசிவில் சிக்கியிருப்பதும் தெரியவந்துள்ளது. மொரீஷுயஸ் கடலில் இறக்கும் நிலையில் இருந்த தாய் டால்பின் தனது குட்டியைக் காப்பாற்றப் போராடிய காணொலி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

டால்பின்கள் இறப்பது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com