முற்றுகிறது மோதல்: சீனா வெளியிட்ட புகைப்படத்துக்கு ஆஸ்திரேலியா கண்டனம்

ஆப்கன் குழந்தையை ஆஸ்திரேலிய வீரர் கொலை செய்வதைப்போல சித்திரிக்கும் வகையில் சுட்டுரையில் சீனா வெளியிட்டிருக்கும் புகைப்படம் போலியானது
ஸ்காட் மோரிசன்
ஸ்காட் மோரிசன்


மெல்போர்ன்: ஆப்கன் குழந்தையை ஆஸ்திரேலிய வீரர் கொலை செய்வதைப்போல சித்திரிக்கும் வகையில் சுட்டுரையில் சீனா வெளியிட்டிருக்கும் புகைப்படம் போலியானது என்று கூறியுள்ள ஆஸ்திரேலியா, இதற்காக சீன அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

 ஆஸ்திரேலியாவின் உள் விவகாரங்களில் சீனாவின் தலையீடு காரணமாக இருநாட்டு உறவு அண்மைக் காலமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதியாகும் பார்லி, மாட்டிறைச்சி உள்ளிட்ட பல்வேறு பொருள்களின் இறக்குமதி வரியை சீனா உயர்த்தியது. 

இதற்கிடையே கடந்த 2009- ஆம் ஆண்டு முதல் 2013- ஆம் ஆண்டு வரையில் 39 ஆப்கன் பொதுமக்களும், சிறைக் கைதிகளும் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஆஸ்திரேலிய சிறப்புப் படை வீரர்களுக்கு தொடர்பு இருப்பதாக அண்மையில் வெளியான ஆஸ்திரேலிய ராணுவ அறிக்கையில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

 இது அந்நாட்டை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், ஆப்கானிஸ்தானில் ஆஸ்திரேலிய ராணுவம் போர்க் குற்றத்தில் ஈடுபட்டதை சுட்டிக்காட்டும் விதமாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் திங்கள்கிழமை சுட்டுரையில் ஒரு புகைப்படப் பதிவை வெளியிட்டிருந்தார்.

ஆட்டுக் குட்டியை தனது மடியில் வைத்திருக்கும் ஒரு ஆப்கன் குழந்தையின் கழுத்தில், ஆஸ்திரேலிய ராணுவ வீரர் ஒருவர் ரத்தம் தோய்ந்த கத்தியை வைத்திருப்பதைப் போன்ற அந்தப் படத்துடன், "ஆஸ்திரேலிய வீரர்களால் ஆப்கன் பொதுமக்கள், கைதிகள் கொல்லப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற செயல்களை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இதில் சம்பந்தப்பட்டவர்களை அதற்குப் பொறுப்பேற்க வற்புறுத்துகிறோம்' என்றும் அவர் கருத்து பதிவிட்டிருந்தார்.

இந்தப் பதிவுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, "சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் புகைப்படம் போலியானது, கேவலமானது. பொய்யான புகைப்படத்தை வெளியிட்டதற்காக சீனா வெட்கப்பட வேண்டும். இந்த நடவடிக்கை உலக நாடுகளிடையே சீனாவின் தரத்தைக் குறைத்துள்ளது.

ஆப்கன் விவகாரம் குறித்து வெளிப்படையான போர்க் குற்ற விசாரணை நடத்தப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையினரை மோசமாக சித்திரிக்கும் இந்தப் பதிவு உடனடியாக நீக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் சீனா மன்னிப்பு கேட்க வேண்டும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com