உயர்ந்துள்ள 'உலகின் உச்சி'!

1865-ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் இந்தியாவில் நில அளவை தலைமை அதிகாரியாக (சர்வேயர் ஜெனரல்) இருந்த ஆண்ட்ரூ வாக், தனக்கு முன்னால் அப்பதவியை வகித்த ஜார்ஜ் எவரெஸ்ட்டின் பெயரை
உயர்ந்துள்ள 'உலகின் உச்சி'!

"ஏனெனில் அது அங்கே இருக்கிறது'. 
மலையேற்ற வீரர்கள் உள்ளிட்ட பலருக்கும் மிகவும் பரிச்சயமான சொற்றொடர். 
உலகின் உச்சந்தலையாக உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் 1920-களில் ஏற முயற்சித்த பிரிட்டன் ராணுவ வீரர் ஜார்ஜ் மல்லோரியிடம் அதற்கான காரணம் குறித்து கேட்டபோது, அவர் அளித்த பதிலே அந்தச் சொற்றொடர்.
ஜார்ஜ் மல்லோரி, எட்மண்ட் ஹிலாரி எனப் பலர் கண்ட கனவு, எவரெஸ்ட் சிகரத்தில் கால்பதிப்பது. பலரின் கனவுகளுக்குக் காரணமாக இருக்கும் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம், 86 செ.மீ. அதிகரித்துள்ளது.
பெயர்க் காரணம் 
தொடக்கத்தில் "15-ஆவது சிகரம்' என்றே எவரெஸ்ட் அறியப்பட்டது. 
1865-ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் இந்தியாவில் நில அளவை தலைமை அதிகாரியாக (சர்வேயர் ஜெனரல்) இருந்த ஆண்ட்ரூ வாக், தனக்கு முன்னால் அப்பதவியை வகித்த ஜார்ஜ் எவரெஸ்ட்டின் பெயரை அந்தச் சிகரத்துக்குச் சூட்டுமாறு கேட்டுக் கொண்டார். 
அதனடிப்படையில் சிகரத்துக்கு 'எவரெஸ்ட்' என்று பெயர் சூட்டப்பட்டது.
உயர வேறுபாடு
நேபாளமும், சீனாவும் கடந்த 2018-ஆம் ஆண்டில் சிகரத்தின் உயரத்தை அளந்தபோது, நேபாளம் எவரெஸ்ட்டின் உச்சியில் உள்ள பனியையும் சேர்த்து
கணக்கிட்டது. ஆனால், சீனா பனியை விடுத்து பாறைப்பகுதி வரை மட்டுமே கணக்கிட்டது. அதன் காரணமாக 4 மீட்டர் வரை உயர வேறுபாடு இருந்ததாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைவிடம்
நேபாளத்துக்கும் சீனாவின் ஆளுகைக்கு உள்பட்ட திபெத்துக்கும் இடையேயான எல்லை. 
உயரம்
8,848 மீட்டராகக் கணக்கிடப்பட்ட எவரெஸ்ட்டின் உயரம், தற்போது 8,848.86 மீட்டராக அதிகரித்துள்ளது. 
6 அடி உயரம் கொண்ட 4,835 மனிதர்கள் ஒருவர் மேல் ஒருவர்  நின்றால், எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை சமன்செய்ய முடியும். 
உள்ளூர் பெயர்கள்
எவரெஸ்ட்டை நேபாள மக்கள் "சாகர்மாதா' என்றும், திபெத் மக்கள் "குவாமோலங்மா' என்றும் அழைக்கின்றனர்
எவரெஸ்ட் எல்லைப் பிரச்னை
எவரெஸ்ட் சிகரம் முழுவதும் சீனாவுக்கே சொந்தம் என்று 1950களில் அந்நாடு உரிமை கொண்டாடியது. சீனாவின் வாதத்தை நேபாளம் ஏற்கவில்லை. பின்னர் 1961-ஆம் ஆண்டில் கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையில், எவரெஸ்ட் சிகரமானது நேபாளத்துக்கும் சீனாவுக்கும் இடைப்பட்ட எல்லைப் பகுதியாக 
மாறியது.
எவரெஸ்ட் அரசியல்
சீனாவுக்கும் நேபாளத்துக்கும் இடையேயான நல்லுறவு தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. நேபாளத்தில் பல்வேறு துறைகளில் சீனா அதிக அளவில் முதலீடு
செய்து வருகிறது. தற்போது எவரெஸ்ட் விவகாரத்தில் இரு நாடுகளும் ஒன்றிணைந்துள்ளது, அவர்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்றே நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

1856 - இந்தியாவிலிருந்த பிரிட்டிஷ் புவியியல் நிபுணர்கள், எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை முக்கோணவியல் விதிகளின் அடிப்படையில் கணக்கிட்டனர். அச்சிகரம் கடல்மட்டத்திலிருந்து 8,840 மீட்டருக்கும் அதிக உயரமாக இருப்பதாக அவர்கள் அறிவித்தனர். 
1953 - எட்மண்ட் ஹிலாரி, டென்சிங் நார்கே ஆகியோர் எவரெஸ்ட் சிகரத்தில் முதல் முதலாகக் காலடித்தடத்தைப் பதித்தனர். 
1954 -  "சர்வே ஆஃப் இந்தியா' அமைப்பு சார்பில் சிகரத்தின் உயரம் கணக்கிடப்பட்டது. அப்போதுதான், கடல்மட்டத்திலிருந்து 8848 மீட்டர் உயரத்தை எவரெஸ்ட் சிகரம் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதைப் பெரும்பாலானோர் ஏற்றுக் கொண்டனர்.
1975 - எவரெஸ்ட் 8,848.11 மீட்டர் உயரம் கொண்டுள்ளதாக சீனா அறிவித்தது. 
1987 - சிகரத்தின் உயரத்தை செயற்கைக்கோள் உதவியுடன் கணக்கிட்ட இத்தாலி நிபுணர்கள், 8,872 மீட்டர் உயரம் கொண்டுள்ளதாக அறிவித்தனர். ஆனால், அந்தக் கணக்கீட்டில் பயன்படுத்தப்பட்ட வழிமுறைகள் குறித்து பலர் சந்தேகம் தெரிவித்தனர்.
1999 - அமெரிக்காவின் தேசிய புவியியல் அமைப்பு, எவரெஸ்ட் 8,850 மீட்டர் உயரம் கொண்டுள்ளதாகக் கணக்கிட்டது. ஆனால், அதைப் பெரும்பாலானோர் ஏற்கவில்லை. 
2005 - எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் சுமார் 4 மீட்டர் குறைந்து, 8,844.43 மீட்டராக உள்ளதாக சீனா அறிவித்தது. ஆனால், நேபாளம் இதை ஏற்கவில்லை. 
2015 - நேபாளத்தில் 7.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் காரணமாக எவரெஸ்ட்டின் உயரம் மாறியிருக்க வாய்ப்பிருப்பதாகப் புவியியல் நிபுணர்கள் தெரிவித்தனர். அதற்குப் பிறகு, நேபாளமும் சீனாவும் தனித்தனியாக எவரெஸ்ட்டின் உயரத்தைக் கணக்கிடும் பணியைத் தொடங்கின.
2018 - எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் மாறவில்லை (8,848 மீட்டர்) என்று நேபாளம் அறிவித்தது. சிகரத்தின் உயரம், 8,844.43 மீட்டராக உள்ளதாக சீனா மீண்டும் அறிவித்தது.
2019 - எவரெஸ்ட்டின் உயரத்தை ஒன்றாக இணைந்து அளப்பதற்கு நேபாள அரசும், சீன அரசும் முடிவெடுத்தன. 
2020 - எவரெஸ்ட் சிகரம், 86 செ.மீ. உயர்ந்து, 8,848.86 மீட்டர் உயரத்தைக் கொண்டிருப்பதாக இரு நாடுகளும் கூட்டாக அறிவித்துள்ளன.

தொகுப்பு: சுரேந்தர் ரவி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com