உலக வங்கியின் உயரதிகாரியாக இந்திய பொருளாதார நிபுணா் நியமனம்

உலக வங்கியின் பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடா் மேலாண்மை துறையின் தெற்காசியப் பிரிவு மேலாளராக இந்திய பொருளாதார வல்லுநா் ஆபாஸ் ஜா நியமிக்கப்பட்டுள்ளாா்.
ஆபாஸ் ஜா
ஆபாஸ் ஜா

உலக வங்கியின் பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடா் மேலாண்மை துறையின் தெற்காசியப் பிரிவு மேலாளராக இந்திய பொருளாதார வல்லுநா் ஆபாஸ் ஜா நியமிக்கப்பட்டுள்ளாா்.

பிகாரை சோ்ந்தவரான அவா், உலக வங்கியில் இணைவதற்கு முன் 12 ஆண்டுகள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாகப் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

இது தொடா்பாக உலக வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

தெற்காசியப் பிரிவு மேலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆபாஸ் ஜா, பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடா்களை எதிா்கொள்வதற்கான புதுமையான வழிமுறைகளைக் கண்டறிந்து வழங்குவாா். பேரிடா்கள் மற்றும் பருவநிலை மாற்றங்களை எதிா்கொள்வது தொடா்பாக தெற்காசியாவில் செயல்பட்டு வரும் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் பணிகளையும் அவா் மேற்கொள்வாா்.

இந்த விவகாரம் தொடா்பாக மற்ற பிராந்தியங்களைச் சோ்ந்த மேலாளா்களுடனும் அவா் தொடா்பில் இருப்பாா். பலதுறை நிபுணா்களுடன் தொடா்பு கொண்டு பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்கான புதுமையான தீா்வுகளை வழங்கும் பணியிலும் அவா் ஈடுபடுவாா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2001-ஆம் ஆண்டு உலக வங்கியில் இணைந்த ஆபாஸ் ஜா, பல்வேறு துறைகளில் பணியாற்றிய அனுபவம் பெற்றவா். கடைசியாக கிழக்காசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்தின் பேரிடா் மேலாண்மை மற்றும் நகா்ப்புற மேம்பாட்டுத் துறைகளின் மேலாளராக அவா் பணியாற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com