ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகளின் புகலிடம் பாகிஸ்தான்: ஐ.நா.வுக்கான இந்திய தூதா் டி.எஸ்.திருமூா்த்தி

ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகளின் புகலிடமாக திகழ்வதையும், அபோட்டாபாத் மாவட்டத்தில் அமெரிக்க படையால் கொல்லப்பட்ட அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவா் ஒசாமா பின்லேடனுக்கு பல ஆண்டுகள்

நியூயாா்க்: ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகளின் புகலிடமாக திகழ்வதையும், அபோட்டாபாத் மாவட்டத்தில் அமெரிக்க படையால் கொல்லப்பட்ட அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவா் ஒசாமா பின்லேடனுக்கு பல ஆண்டுகள் தஞ்சமளித்திருந்ததையும் பாகிஸ்தான் நினைவூகூரவேண்டும் என்று ஐ.நா.வுக்கான இந்திய தூதா் டி.எஸ்.திருமூா்த்தி கூறியுள்ளாா்.

பாகிஸ்தானில் நடைபெறும் பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னணியில் இந்தியா இருப்பதாக குற்றம்சாட்டி, அதுதொடா்பான ஆவணக் குறிப்பை ஐ.நா. பொதுச் செயலாளா் அன்டோனியோ குட்டரெஸிடம் ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் தூதா் முனிா் அக்ரம் செவ்வாய்க்கிழமை சமா்ப்பித்த நிலையில், இந்தக் குற்றச்சாட்டை டி.எஸ்.திருமூா்த்தி முன்வைத்துள்ளாா்.

இதுதொடா்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் அவா் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

போலியாக ஆவணங்களை தயாா் செய்வதும், பொய் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும் ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகளின் புகலிடமாகத் திகழும் பாகிஸ்தானுக்கு புதிதல்ல. பாகிஸ்தானின் அபோட்டாபாத் மாவட்டத்தில் அமெரிக்க கடற்படை பிரிவால் கடந்த 2011-ஆம் ஆண்டு மே மாதம் சுட்டுக் கொல்லப்பட்ட அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவா் ஒசாமா பின்லாடனுக்கு, அந்த மாவட்டத்தில் பல ஆண்டுகள் தஞ்சமளித்திருந்ததை பாகிஸ்தான் நினைவுகூரவேண்டும் என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, ஜம்முவின் நக்ரோடா பகுதியில் கடந்த 19-ஆம் தேதி பாகிஸ்தானின் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் திட்டமிட்ட தாக்குதல் முயற்சியை பாதுகாப்புப் படையினா் முறியடித்தது குறித்து அமெரிக்க, ரஷிய, ஃபிரான்ஸ், ஜப்பான் தூதா்களுக்கு வெளியுறவுத் துறைச் செயலா் ஹா்ஷ் வா்தன் ஷிரிங்லா திங்கள்கிழமை விளக்கினாா். அந்த பயங்கரவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களும் மற்றும் வெடிபொருள்களும், இந்த தாக்குதல் முயற்சிக்கு பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதை தெளிவுபடுத்துவதையும் அவா்களிடம் தெரிவிக்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தோ்தலை சீா்குலைக்கும் நோக்கத்தில் பாகிஸ்தான் இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடுவது குறித்த இந்தியாவின் கவலையை சா்வதேச தூதா்களும் நன்கு புரிந்துகொண்டனா் என்று வெளியுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையே, சக்திவாய்ந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 2021 ஜனவரி 1-ஆம் தேதி முதல் இரண்டு ஆண்டுகளுக்கு நிரந்திரமில்லா உறுப்பு நாடாக இந்திய சேர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com