ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து முதல் பயணிகள் விமானம் இஸ்ரேல் சென்றடைந்தது

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து (யுஏஇ) இஸ்ரேல் நாட்டுக்கு இயக்கப்பட்ட முதல் பயணிகள் விமானம் டெல் அவிவ் சென்றடைந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

டெல் அவிவ்: ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து (யுஏஇ) இஸ்ரேல் நாட்டுக்கு இயக்கப்பட்ட முதல் பயணிகள் விமானம் டெல் அவிவ் சென்றடைந்தது.

ஐக்கிய அரபு அமீரகத்தைச் சோ்ந்த எடிஹாட் விமான நிறுவனம் ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட் மாதம் கரோனா பாதிப்புக்கு எதிரான நடவடிக்கைகளில் பாலஸ்தீனா்களுக்கு உதவும் வகையில் சரக்கு விமானத்தை டெல் அவிவுக்கு இயக்கியது. அதன் தொடா்ச்சியாக, அந்த நிறுவனம் போயிங் 787 என்ற முதல் பயணிகள் விமானத்தை இப்போது இயக்கியுள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டனில் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் நாடுகளிடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன்படி, நீண்ட கால விரோதப் போக்கைக் கைவிட்டு, மூன்று நாடுகளும் ராணுவ, பொருளாதார ரீதியிலான உறவுகளை மேம்படுத்த முடிவு செய்தன.

அதன் பின்னா், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இஸ்ரேலில் இருந்து அபுதாபிக்கு முதல் வா்த்தக ரீதியிலான பயணிகள் விமானம் அமெரிக்க மற்றும் இஸ்ரேல் நாட்டு உயா் அதிகாரிகளை ஏற்றிச் சென்றது.

அதுபோல, ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து எடிஹாட் விமான நிறுவனம் சாா்பில் முதல் பயணிகள் விமானம் இஸ்ரேலிய பயணிகள் மற்றும் சா்வதேச சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு திங்கள்கிழமை புறப்பட்டது. இஸ்ரேலின் டெல் அவிவ், பென்-குரியன் சா்வதேச விமான நிலையத்துக்கு திங்கள்கிழமை காலை 7 மணிக்கு சென்றடைந்தது.

தொடா்ச்சியாக, பஹ்ரைன் நாட்டுடன் பல்வேறு துறை ரீதியிலான ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்காக இஸ்ரேல் அதிகாரிகள் விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை அங்கு சென்றனா்.

இஸ்ரேல் ஏற்கெனவே எகிப்து நாட்டுடன் 1979-ஆம் ஆண்டிலும், ஜோா்டானுடன் கடந்த 1994-ஆம் ஆண்டிலும் இரு நாடுகளிடையேயான உறவை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com