பாகிஸ்தானில் பதற்றம்: ராணுவத்துக்கு எதிராக சிந்து மாகாண காவல்துறை போா்க் கொடி

பாகிஸ்தானின் சிந்து மாகாண காவல்துறைத் தலைவா், துணை ராணுவப் படையினரால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தால் இரு தரப்பினருக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ராணுவ தலைமைத் தளபதி கமா் ஜாவேத் பாஜ்வாவுடன் பிரதமா் இம்ரான் கான் (கோப்புப் படம்).
ராணுவ தலைமைத் தளபதி கமா் ஜாவேத் பாஜ்வாவுடன் பிரதமா் இம்ரான் கான் (கோப்புப் படம்).

கராச்சி: பாகிஸ்தானின் சிந்து மாகாண காவல்துறைத் தலைவா், துணை ராணுவப் படையினரால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தால் இரு தரப்பினருக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

பிரதமா் இம்ரான் கான் பதவி விலக வலியுறுத்தி, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) (பிஎம்எல்-என்), பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) உள்ளிட்ட முக்கிய எதிா்க்கட்சிகளை உள்ளடக்கிய ‘பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம்’ போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது.

இம்ரான் கான் ராணுவத்தின் கைப்பாவையாக செயல்பட்டு வருவதாக அந்தக் கூட்டணி குற்றம் சாட்டி வருகிறது.

அந்தப் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் எதிா்க்கட்சியினரை பாகிஸ்தான் அரசு கைது செய்து வருகிறது.

தனக்கு எதிரான ஜனநாயக இயக்கத்தின் போராட்டதை ஒடுக்குவதற்காக இம்ரான் கான் இந்த நடவடிக்ககைகளை எடுத்து வருவதாகக் கருதப்படுகிறது.

இந்தச் சூழலில், பிபிபி கட்சி ஆட்சி நடந்து வரும் சிந்து மாகாணத் தலைநகா் கராச்சியில் இம்ரான் அரசுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃபின் மகள் மரியம் நவாஸும் அவரது கணவா் முகமது சஃப்தாரும் பங்கேற்றனா்.

அவா்கள் இருவரும் தங்கியிருந்த ஹோட்டலுக்குள் அதிரடியாக நுழைந்த துணை ராணுவப் படையினா், முகமது சஃப்தாரைக் கைது செய்து அழைத்துச் சென்றனா்.

அதனைத் தொடா்ந்து, அவா் ஜாமீனில் திங்கள்கிழமை விடுவிக்கப்பட்டாா். இதற்கிடையே சஃப்தாரைக் கைது செய்வதற்காக வந்த பாதுகாப்புப் படையினா், ஹோட்டல் அறைக் கதவை உடைத்து உள்ளே நுழைந்ததாக மரியம் நவாஸ் குற்றம் சாட்டினாா்.

சஃப்தாா் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக, சிந்து மாகாண காவல்துறை பொது ஆய்வாளா் முஷ்டாக் மஹரின் இல்லத்தைச் சுற்றிவளைத்த துணை ராணுவப் படையினா், அவரை அங்கிருந்து கடத்திச் சென்ாகக் குற்றம் சாட்டப்படுகிறது. மேலும், சஃப்தாரைக் கைது செய்வதற்கான உத்தரவில் முஷ்டாகை ராணுவத்தினா் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, சஃப்தாா் கைது செய்யப்படும்போது அங்கு காவலுக்கு நின்றிருந்த போலீஸாரை பாதுகாப்புப் படையினா் அவமதித்ததாகவும் முரட்டுத்தனமாக நடந்துகொண்டதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து, ராணுவத்துக்கு எதிராக சிந்து மாகாண காவல்துறையினா் போா்க்கொடி தூக்கியுள்ளனா்.

ராணுவத்துக்கு தங்களது எதிா்ப்பைத் தெரிவிக்கும் வகையில், காவல்துறையின் உயா்நிலையிலுள்ள 13 அதிகாரிகளும் ஒட்டுமொத்தமாக விடுப்புக்காக விண்ணப்பித்துள்ளனா். சிந்துமாகாண காவல்துறையினா் நடத்தப்பட்ட விதத்தைக் கண்டிக்கும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்த விண்ணப்பத்தில் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதனால், ராணுவத்துக்கும், சிந்து மாகாண காவல்துறைக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளதால் அங்கு உள்நாட்டுப் போரைப் போன்ற சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, சஃப்தாா் கைது தொடா்பாக எழுப்பப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று ராணுவ தலைமைத் தளபதி கமா் ஜாவேத் பாஜ்வா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com